எம்ஜி மோட்டார்ஸின் முதல் எஸ்யூவியின் பெயர் வெளியீடு!
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. முதல் மாடலாக எஸ்யூவி ரக கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் முதல் எஸ்யூவி மாடலின் பெயரை வெளியிட்டு இருக்கிறது.

இங்கிலாந்தை சேர்ந்த பழமையான கார் நிறுவனம் எம்ஜி மோட்டார்ஸ் தற்போது சீனாவை சேர்ந்த செயிக் வாகன குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது.

முதல் மாடலாக எஸ்யூவி ரக கார் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவி மாடல் எம்ஜி ஹெக்டர் என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக பிரிமியம் ரகத்தில் வர இருக்கிறது. எனினும், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களைவிட வடிவத்தில் பெரிய மாடலாக இருக்கும். எனவே, இடவசதியில் சிறப்பான மாடலாக வாடிக்கையாளர்களை கவரும்.

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் ஏராளமான பிரிமியம் அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். செங்குத்து வாக்கிலான தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மல்டி இன்ஃபர்மேஷன் திரை, புஷ் பட்டன் ஸ்டார்ட், பனோரமிக் சன்ரூஃப், லெதர் இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் வசதிகளுடன் வருகிறது.

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும். ஸ்பை படங்களின் மூலமாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரூ.20 லட்சத்தையொட்டிய எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் டூஸான், ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர் உள்ளிட்டவை போட்டியாக இருக்கும்.

குஜராத் மாநிலம், ஹலோல் பகுதியில் உள்ள செயிக் நிறுவனத்தின் ஆலையில் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால், விலையை மிக சவாலாக நிர்ணயிக்கும் வாய்ப்பு இருந்தாலும், இது பிரிமியம் மாடலாக நிலைநிறுத்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








