வெறும் 50,000-ல் எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் முன்பதிவு துவக்கம்...
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது அடுத்த இந்திய அறிமுகமான மாடலான இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவை இன்று துவங்கியுள்ளது. மேலும் இந்த முன்பதிவுகள் வெறும் 50,000 ரூபாய்க்கு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளது.

எம்ஜி இசட்எஸ் காருக்கான இந்த முன்பதிவுகள் பெங்களூர், டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட ஐந்து நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நகரங்களில் உள்ள டீலர்ஷிப்களிடம் மட்டுமில்லாமல் இணையத்தளத்திலும் உங்களுக்கான எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியை முன்பதிவு செய்யலாம்.

இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து ஹெக்டர் மாடலுக்கு பிறகு இந்தியாவில் அறிமுகமாகும் இரண்டாவது காராகும். ஹூண்டாய் கோனா இவி மாடலுக்கு போட்டியாக சந்தையில் களமிறங்கவுள்ள இந்த எலக்ட்ரிக் காரின் விற்பனை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் துவங்கவுள்ளது. இந்த காரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.23 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி நிறுவனம் இந்த எலக்ட்ரிக் காரில் 44.5 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி அமைப்பை வழங்கியுள்ளது. இந்த பேட்டரி அதிகப்பட்சமாக 141 பிஎச்பி பவரையும் சிங்கிள் சார்ஜில் 340 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. மேலும் இந்நிறுவனம் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் நிலையான மற்றும் வேகமான என இரு சார்ஜிங் தொழிற்நுட்பங்களை பொருத்தியுள்ளது.

இதில் ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் வெறும் 60 நிமிடங்களில் பேட்டரியை 80 சதவீதம் வரை அதிகரிக்க முடியும். அதே, நிலையான சார்ஜர் பேட்டரியை முழுவதும் நிரப்ப 6- 8 மணிநேரங்களை எடுத்து கொள்கிறது. இந்த காருக்காகவும் இனி அறிமுகப்படுத்தவுள்ள எலக்ட்ரிக் கார்களுக்காகவும் இந்தியா முழுவதும் சார்ஜிங் நிலையங்களை உருவாக்க எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவியுடன் வழங்கப்படவுள்ள சார்ஜிங் கேபிளை எந்தவொரு 15 ஆம்பியர் சாக்கெட்டிலும் இணைக்க முடியும். இந்த சார்ஜிங் கேபிள் மட்டுமின்றி ஏசி ஃபாஸ்ட்-சார்ஜரையும் இந்த எலக்ட்ரிக் காருடன் எம்ஜி நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த சார்ஜர், வீட்டிலும் அலுவலகத்திலும் கூட உபயோகிக்கும் வகையில் இருக்கும்.

மேலும் இந்தியா முழுவதும் உள்ள தனது டீலர்ஷிப்களில் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் வழங்கவுள்ளது. 24x7 நேரமும் இந்த சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்கை வழங்க திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் தனது முதல் 50kW ஃபாஸ்ட்-சார்ஜிங் நிலையத்தை ஃபார்டும் நிறுவனத்துடன் இணைந்து குர்கானில் உருவாக்கும் வேலையிலும் ஏற்கனவே இறங்கிவிட்டது.

இந்த எலக்ட்ரிக் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓனர்ஷிப் பேக்கேஜும் வழங்கப்படவுள்ளன. இ-ஷீல்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த பேக்கேஜின் மூலம் வாடிக்கையாளர்கள் 5 வருட பயன்பாடு/அன்லிமிடட் கிமீ உத்தரவாதத்தை பெறலாம். வாகனத்திற்கு மட்டுமில்லாமல் பேட்டரிக்கும் 8 வருடம்/1.50 லட்சம் கிமீ உத்தரவாதத்தை இ-ஷீல்டு மூலம் பெறலாம்.

ஹெக்டர் மாடல் மூலம் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் வலுவாக இந்தியாவில் காலூன்றி விட்டதால் இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு மாடலாக அறிமுகமாகவுள்ள இந்த இசட்எஸ் எஸ்யூவி காரின் விற்பனையில் எந்த பிரச்சனையும் இருக்காது. நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு எம்ஜி இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியை டெஸ்ட் ட்ரைவ் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆதலால் இந்த காரை பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள நமது தளத்துடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications








