ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு டஃப் கொடுக்கும் எம்ஜி இசட்... இந்த விஷயத்திலும் போட்டா போட்டி!
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கும், எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஆஸ்திரேலிய கிராஷ் டெஸ்ட்டில் ஹூண்டாய் கோனா கார் அசத்திய நிலையில், உலகின் மிக கடுமையான விதிகள் பின்பற்றப்படும் ஐரோப்பிய கிராஷ் டெஸ்ட்டில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அசத்தி காலரை தூக்கிவிட்டுள்ளது.

எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, இங்கிலாந்து, தென் கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. அந்நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வரும் ஜனவரியில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த கார் இந்தியாவிலும் பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்த கார் யூரோ என்சிஏபி அமைப்பால் கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில், அதிகபட்சமான 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீட்டை எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கிறது.

பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த கார் ஐரோப்பிய என்சிஏபி நிறுவனத்தால் மோதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் அதிகபட்சமான பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றுள்ளது.

இந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கும், எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கும் இடையில்தான் கடும் போட்டியாக இருக்கப்போகிறது. இந்த நிலையில், கடந்த அக்டோபரில் ஆஸ்திரேலிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் ஹூண்டாய் கோனா கார் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற நிலையில், எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அதைவிட கடுமையான கிராஷ் டெஸ்ட்டில் அசத்தி இருக்கிறது.

எம்ஜி இசட்எஸ் கார் முழுமையான முதல் இன்டர்நெட் வசதி கொண்ட கார் மாடலாக தெரிவிக்கப்படுகிறது. விலை, சிறப்பம்சங்களில் நேரடி போட்டியாக இருக்கும்.

இந்த புதிய காரில் 44.5kWh லிக்யூடு கூல்டு பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிமீ தூரம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 முதல் 8 மணிநேரம் பிடிக்கும். 50kW ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், 50 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.
புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் மின் மோட்டார் 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.5 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.

புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு ரூ.50,000 முன்பணத்துடன் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிலும், ஆன்லைனிலும் முன்பதிவு ஏற்கப்படுகிறது. முதலில் முன்பதிவு செய்யும் 1,000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிமுகச் சலுகை விலையில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த காருக்கு 5 ஆண்டுகள் அல்லது வரம்பு இல்லாத கிலோமீட்டர்களுக்கான வாரண்டி வழங்கப்படும். இதன் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு வாரண்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோமீட்டர் பயணிப்பதற்கு ரூ.1 மட்டுமே செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








