எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் 'ரேஞ்ச்' எங்கோ போகப்போகுது...!!
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை விட அதிக தூரம் பயணிக்கும் திறனை வழங்கும் புதிய பேட்டரி மாடல் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த வாரம் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் வரும் ஜனவரியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எனினும், கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. டிசைன், வசதிகள் சிறப்பாக இருப்பதுடன், பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்படுவதே இந்த கார் அமோக வரவேற்பை பெற்றதற்கு முக்கிய காரணம்.

இந்த நிலையில், எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் இருக்கும் லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஹூண்டாய் கோனா காரைவிட இதன் ரேஞ்ச் எனப்படும் பயண தூரத்தை வழங்கும் திறன் குறைவாக இருப்பது பாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் மார்க்கெட்டை உடைத்துவிடும் நோக்கத்தில் புதிய முயற்சியில் எம்ஜி மோட்டார்ஸ் இறங்கி இருக்கிறது. அதாவது, இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் அதிக பயண தூரத்தை வழங்கும் ஆற்றல் வாய்ந்த பேட்டரி கொண்ட மாடலை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாம்.

தற்போது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 44kWh திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. எதிர்காலத்தில் 73kWh திறன் வாய்ந்த பேட்டரியுடன் அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த பேட்டரியை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடந்து வரும் நிலையில், சந்தைக்கு இந்த மாடல் வருவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் பயணிக்கும் என்ற வாய்ப்பு கிடைத்தால் அது நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம். அதேநேர்தில், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரைவிட எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரூ.2 லட்சம் வரை குறைவான விலையில் வரும் என்பதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்புள்ளது.

முதல்கட்டமாக நாட்டின் முக்கிய நகரங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காருக்கான சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அடங்கிய கட்டமைப்பை சிறப்பாக உருவாக்குவதற்கான திட்டத்துடன் எம்ஜி மோட்டார்ஸ் செயலாற்றி வருகிறது.
Source: Cardekho


Click it and Unblock the Notifications








