கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி!
மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவிக்கு தனி ரசிக பட்டாளம் இருக்கிறது. கட்டுமஸ்தான தோற்றம், ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற தகவமைப்புகளுடன் எஸ்யூவி பிரியர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி வரும் 25ந் தேதி உலகளாவிய அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது.

அதற்கு முன்னதாக இந்த புதிய பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் படங்கள் ஆட்டோஇன்டஸ்ட்ரியா என்ற இணையதளம் மூலமாக கசிந்துள்ளன. வழக்கம்போல் முகப்பு மிக பிரம்மாண்டமாகவும், முரட்டுத்தனமாகவும் காட்சி தருகிறது.

புதிய பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூயின் முகப்பில் மெல்லிய எல்இடி ஹெட்லைட்டுகள், க்ரோம் பட்டை க்ரில் அமைப்பு, பெரிய ஏர்டேம், வலிமையான பம்பர் அமைப்பில் பனி விளக்குகளுடன் சிறப்பாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

பக்கவாட்டில் வலிமையான ஷோல்டர் லைன் மற்றும் பெரிய வீல் ஆர்ச்சுகள் கவனத்தை ஈர்க்கின்றன. புதிய மெஷின் கட் அலாய் வீல்களும் வசீகரத்தை கூட்டுகின்றன. கூரை, டி பில்லர் மற்றும் டெயில் லைட்டுகள் கூட்டணியில் வித்தியாசமான தோற்றத்தை பெற்றுள்ளது.

இந்த எஸ்யூவியில் ரூஃப் ஸ்பாய்லர், செங்குத்து வாக்கில் கொடுக்கப்பட்டு இருக்கும் எல்இடி டெயில் லைட்டுகள், சில்வர் ஸ்கஃப் பிளேட்டுகள், புதிய பம்பர் அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் பஜேரோ ஸ்போர்ட் பிரியர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் டிசைன் மாற்றம் கண்டுள்ளது.

உட்புற டிசைைனும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டேஷ்போர்டு அமைப்பு, சென்ட்ரல் கன்சோல், ஸ்டீயரிங் வீல் ஆகிய பகுதிகளில் சில்வர் பீடிங் அலங்காரம் கவர்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு இருபுறத்திலும் ஏசி வென்ட்டுகள் உள்ளன.

ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் பட்டன்கள், பேடில் ஷிஃப்ட் வசதி, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றையும் ஸ்பை படங்கள் மூலமாக காண முடிகிறது. இதுதவிர, ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி வர இருக்கிறது.

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 176 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். அதிக செயல்திறன் மற்றும் அதிர்வுகள் குறைவாக இதன் எஞ்சின் டியூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி அடுத்த இரு வாரங்களில் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
Source: Autoindustriya


Click it and Unblock the Notifications








