ஒரு புது மாதிரியான காரை இந்தியாவில் ரகசியமாக சோதனை செய்யும் பிஎம்டபிள்யூ!
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் ரக கார்கள் எக்ஸ் வரிசையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதிலும், எக்ஸ் வரிசையில் ஒற்றைப்படை எண் கொண்ட கார்கள் (X1, X3, X5,X7) முழுமையான சொகுசு எஸ்யூவி ரக மாடல்களாகவும், இரட்டைப் படை எண் கொண்ட மாடல்கள் (X4, X6) கூபே - எஸ்யூவி மாடல்களின் டிசைன் அம்சங்களை கலந்து கட்டிய க்ராஸ்ஓவர் மாடல்களாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

அந்த வகையில், எக்ஸ் வரிசையில் புதிய தலைமுறை எக்ஸ்-6 கூபே க்ராஸ்ஓவர் ரக மாடலை இந்தியாவில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது பிஎம்டபிள்யூ நிறுவனம். தற்போது விற்பனையில் உள்ள மாடலில் இருந்து பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களை இந்த புதிய மாடல் பெற்றிருப்பது ரஷ்லேன் வெளியிட்டுள்ள ஸ்பை படங்கள் மூலமாக தெரியவருகிறது.

அண்மையில்தான் இந்த புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-6 கார் உலகளாவிய அளவில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது கார் பிரியர்களின கவனத்தை ஈர்த்துள்ளதுடன், ஆச்சரியத்தையும் தந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு செடான் கார் மற்றும் எக்ஸ்7 எஸ்யூவி கார்களை தொடர்ந்து இந்த புதிய எக்ஸ்6 க்ராஸ்ஓவர் காரை பிஎம்டபிள்யூ மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, பண்டிகை காலத்திலேயே இந்த காரை விற்பனைக்கு களமிறக்க முடிவு செய்துள்ளதாகவும் கருதப்படுகிறது.

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் எக்ஸ்-7 எஸ்யூவி கார்கள் உருவாக்கப்பட்ட க்ளஸ்ட்டர் ஆர்க்கிடெக்ச்சர் என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையில்தான் இந்த புதிய எக்ஸ்-6 காரும் உருவாக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் மிக வலிமையான தோற்றத்தை தரும் கிட்னி க்ரில் அமைப்பு, பிரம்மாண்டமான அலாய் வீல்கள், பின்புறத்தில் பூட் ரூமுடன் இயைந்து நிற்கும் கூரை அமைப்பு என மிக வித்தியாசமான டிசைனில் வசீகரிக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

புதிய எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் மிக வசீகரமாக இருக்கும் என்பது புலனாகிறது. இரட்டை குழல் சைலென்சர்கள், பின்புறத்தில் மிக வலிமையான தோற்றத்தை தரும் பம்பர், அகலமான டயர்கள் இந்த காரின் தோற்றத்தை பிரம்மாண்டமாக காட்டுகிறது.

உட்புறமும் முற்றிலுமாக மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது. இந்த காரில் 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற இருக்கின்றன.

இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐடிரைவ் சாஃப்ட்வேரும் இதில் இடம்பெற்றிருக்கும். வாய்ஸ் அசிஸ்ட், வயர்லெஸ் சார்ஜர், வைஃபை ஹாட்ஸ்பாட், ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கும்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-6 காரில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். இதன் 4.4 லிட்டர் வி8 ட்வின் டர்போ சார்ஜ்டு எஞ்சின் அதிகபட்சமாக 523 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். ஆனால், இன்னும் உறுதியானத் தகவல்கள் இல்லை.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-6 காரில் ஆக்டிவ் டிரைவிங் அசிஸ்டென்ட், பார்க் டிஸ்டென்ஸ் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், லேன் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். ரூ.1 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Rushlane


Click it and Unblock the Notifications








