புதிய பிஎம்டபிள்யூ இசட்4 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
புதிய பிஎம்டபிள்யூ இசட்4 ரோட்ஸ்டெர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முக்கிய விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ரோட்ஸ்டெர் எனப்படும் தனித்துவமான திறந்து மூடும் கூரை அமைப்புடைய, புதிய பிஎம்டபிள்யூ இசட்-4 கார் இரண்டு வேரியண்ட்டுகளில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. எஸ்டிரைவ்20ஐ என்ற பேஸ் வேரியண்ட்டும், எம்40ஐ என்ற டாப் வேரியண்ட்டிலும் கிடைக்கும். இறக்குமதி செய்யப்பட்டு இந்த கார் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

வெளிநாடுகளில் புதிய பிஎம்டபிள்யூ இசட்4 கார் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களில் வந்துள்ளது. எஸ்டிரைவ்20ஐ பேஸ் வேரியண்ட்டில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 200 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. இரண்டிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த மாடல் லிட்டருக்கு 14.37 கிமீ மைலேஜை வழங்கும்.

சக்திவாய்ந்த இசட்-4 காரின் எம்40ஐ மாடலில் இருக்கும் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 345 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலானது 0 -100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டிவிடும் என்பதுடன் 250 கிமீ வேகம் வரை செல்லும். இந்த கார் லிட்டருக்கு 12.82 கிமீ மைலேஜை வழங்கும்.

உயர் வகை மாடலில் ஏராளமான கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் விசேஷ ஆக்சஸெரீகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஸ்போர்ட் சஸ்பென்ஷன், எலக்ட்ரானிக் கன்ட்ரோல் வசதியுடன் சஸ்பென்ஷன் டேம்பர்கள், எம் ஸ்போர்ட் பிரேக்கிங் சிசஸ்டம், எலக்ட்ரானிக் கன்ட்ரோல் வசதியுடன் பிரேக் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

பிஎம்டபிள்யூ இசட்4 கான்செப்ட் அடிப்படையில் இந்த மாடல் தயாரிப்பு நிலை மாடலாக உருப்பெற்றுள்ளது. ஏராளமான டிசைன் அம்சங்கள் கான்செப்ட் மாடல் படியே தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. கருப்பு வண்ண சிறுநீரக வடிவ க்ரில் மைப்பு, பெரிய ஏர் இன்டேக் பகுதி, புதிய ஹெட்லைட் டிசைன் ஆகியவை முக்கிய அம்சங்கள். பாடி ஏர்வென்ட்டுகள், புதிய அலாய் வீல்களும் வசீகரிக்கின்றன.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ கார்களை பிரதிபலிக்கும் வகையிலான இன்டீரியர் தீம் உள்ளது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகிய எம் வேரியண்ட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய பிஎம்டபிள்யூ இசட்4 காரில் கேமரா மற்றும் ரேடார் அடிப்படையில் செயல்படும் பாதுகாப்பு அம்சம் குறிப்பிடத்தக்கது. இதன்மூலமாக, எமர்ஜென்சி பிரேக்கிங் வசதி, தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி, பாதசாரிகள் குறுக்கே வருவது குறித்த எச்சரிக்கைகளை முன்கூட்டியே பெறலாம்.

பழைய மாடலைவிட டிசைனிலும், தொழில்நுட்பத்திலும் வெகுவாக மேம்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ இசட்4 காரின் எஸ்டிரைவ்20ஐ வேரியண்ட்டிற்கு ரூ.64.9 லட்சம் விலையும், எம்40ஐ வேரியண்ட்டிற்கு ரூ.78.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆடி டிடி, போர்ஷே 718 பாக்ஸ்டர் ஆகிய கார் மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








