ஃபோர்டு நிறுனத்தின் மிக சக்திவாய்ந்த ஷெல்பி மஸ்டாங் கார் வெளியீடு!
ஃபோர்டு நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஷெல்பி மஸ்டாங் கார் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் திறன், படங்கள் மற்றும் முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு நிறுவனத்தின் மஸ்டாங் கார் ஸ்போர்ட்ஸ் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த தனித்துவம் வாய்ந்த மஸில் ரக ஸ்போர்ட்ஸ் கார் இப்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலும் விற்பனையில் இருக்கிறது.

இந்த நிலையில், ஃபோர்டு மஸ்டாங் காரின் மிக சக்திவாய்ந்த மாடல் ஷெல்பி மஸ்டாங் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், அதிக திறன் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஷெல்பி மஸ்டாங் காரை ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

ஃபோர்டு ஷெல்பி மஸ்டாங் ஜிடி 500 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புபதிய மாடலில் 5.2 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 760 பிஎச்பி பவரையும், 847 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதுதான் ஃபோர்டு நிறுவனம் இதுவரை தயாரித்த கார்களில் மிகவும் சக்திவாய்ந்த தயாரிப்பு நிலை மாடலாக குறிப்பிடப்படுகிறது.

இந்த சக்திவாய்ந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரில் 7 ஸ்பீடு ட்வின் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. டிரெமெக் நிறுவனம் உருவாக்கி தந்திருக்கும் இந்த கியர்பாக்ஸ் வெறும் 100 மில்லி செகண்டில் கியர் மாற்றும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுளளது.

இதன் டிராக் மோடு மூலமாக லான்ச் கன்ட்ரோல் பாதுகாப்பு வசதியை பெற முடியும். லைன் லாக் சிஸ்டம் மூலமாக பர்ன் அவுட் சாகசங்களை நிகழ்த்துவதற்கும், டிராக் ரேஸில் பங்கற்கும் வீரர்களுக்கும் துணை புரியும்.

இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கும் எஞ்சின் மனித ஆற்றல் மூலமாக முழுமையாக கட்டமைக்கப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த காரின் செயல்திறனுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில், ஆக்டிவ் டேம்பர்களுடன் கூடிய இலகு எடை காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிரேம்போ நிறுவனத்தின் 6 பிஸ்டன்கள் கொண்ட 420 மிமீ டிஸ்க் பிரேக்குகள் மற்றும் மிச்செலின் பைலட் ஸ்போர்ட் 4எஸ் டயர்கள் இந்த காரில் பொருத்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த காருக்கு இரண்டு விதமான கையாளுமையை வழங்கும் சிறப்பு பேக்கேஜுகளை வழங்குவதாகவும் ஃபோர்டு தெரிவித்துள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பில் மாறுதல் மற்றும் ஸ்பாய்லர் கொண்ட ஒரு பேக்கேஜும், 20 அங்குல கார்பன் ஃபைபர் சக்கரங்கள் கொண்ட மற்றொரு பேக்கேஜும் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு இறுதியில் ஃபோர்டு ஷெல்பி மஸ்டாங் ஜிடி500 மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ஃபோர்டு மஸ்டாங் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








