புதிய ஆடி ஏ6 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!
புதிய தலைமுறை ஆடி ஏ6 கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அறிமுக விழாவிலிருந்து எமது நிருபர் புரோமித் கோஷ் வழங்கும் படங்கள் மற்றும் தகவல்கள், இந்த காரின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சொகுசு கார் மார்க்கெட்டில் ஆடி ஏ6 காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. அந்த வகையில், முற்றிலும் புதிய தலைமுறை ஆடி ஏ6 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கார் எட்டாவது தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஆடி ஏ6 கார் பிரிமீயம் ப்ளஸ் மற்றும் டெக்னாலஜி என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இதுவரை விற்பனையில் இருந்த முந்தைய மாடலைவிட இந்த புதிய தலைமுறை ஆடி ஏ6 கார் நீளத்தில் 7 மிமீ, அகலத்தில் 12 மிமீ மற்றும் உயரத்தில் 2 மிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆடி ஏ6 கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே வந்துள்ளது. இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 248 பிஎஸ் பவரையும் 370 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில், 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் (டிசிடி) எஸ் ட்ரோனிக் கியர்பாக்ஸுடன் 12V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் உள்ளது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது. விரைவில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் எதிர்பார்க்கலாம்.

இந்த காரின் முகப்பு வழக்கமாக ஆடி நிறுவனத்தின் பிரம்மாண்ட க்ரில் அமைப்புடன், எல்இடி ஹெட்லைட்டுகள் ஆகியவை வசீகரத்தை கொடுக்கின்றன. இதன் எல்இடி டெயில் லைட்டுகள் தனித்துவமாகவும், ஆடி ஏ8 காரை நினைவூட்டுவதாகவும் அமைந்துள்ளது. இரட்டை வண்ண 18 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அலை போல ஒளிரும் டைனமிக் இண்டிகேட்டர்கள் இதனை ஆடி வாரிசு என்று பரைசாற்றுகிறது.

புதிய ஆடி ஏ6 காரில் வெர்ச்சுவல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இரண்டு திரைகளுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த காரின் சென்ட்ரல் கன்சோலின் மேல்புறத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் தொடுதிரையானது பொழுதுபோக்கு, நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளை வழங்கும். கீழே உள்ள திரையானது க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தை கட்டுப்படுத்த உதவும்.

புதிய ஆடி ஏ6 காரில் 8 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்புற, பின்புற பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஆடி ஏ6 கார் ரூ.54.2 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








