புதிய ஹோண்டா சிட்டி காரில் டர்போ பெட்ரோல் எஞ்சின் இந்தியா வருமா?
புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் சக்திவாய்ந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் இந்தியாவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக ஹோண்டா சிட்டி கார் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய ஹோண்டா அக்கார்டு, சிவிக் கார்களின் டிசைன் அம்சங்களுடன் வடிவமைப்பில் பழைய மாடலின் சாயல் துளியும் இல்லாமல் முற்றிலும் புதிய மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களின் நாடித்துடிப்பை எகிற வைத்துள்ளது.

தாய்லாந்தில் ஹோண்டா சிட்டி கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுவது உறுதியான விஷயம்தான்.

இந்த நிலையில், தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வானது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் 122 பிஎஸ் பவரையும், 173 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

இந்த எஞ்சினுடன் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும் என்பதுடன் விலை உயர்ந்த வேரியணட்டுகளில் பேடில் ஷிஃப்ட் வசதியும் கொடுக்கப்படுகிறது. தாய்லாந்து நாட்டு சோதனைகளின் அடிப்படையில், இந்த மாடல் லிட்டருக்கு 23.8 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது

அதாவது, எரிபொருள் சிக்கனம், சிவிடி கியர்பாக்ஸ், சிறப்பான செயல்திறன் என அனைத்து விதத்திலும் இந்த டர்போ பெட்ரோல் எஞ்சின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பையும், தேர்வாகவும் இருக்கும்.

தற்போது வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளைவிட கூடுதல் சக்திவாய்ந்த மாடலாக இந்த டர்போ மாடல் நிலைநிறுத்தப்படும். எனவே, இந்த எஞ்சின் இந்தியாவிலும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், 8.0 தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் பெற்றிருக்கிறது.

இந்த காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. எனவே, விலை கணிசமாக அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாஸ், ஸ்கோடா ரேபிட் உள்ளிட்ட கார்களுடன் நேரடியாக போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








