புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் அறிமுகம்!
புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் நடைபெற இருக்கும் டோக்கியோ மோட்டார் ஷோ மூலமாக பொது பார்வைக்கு வர இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் ரகத்தில் ஹோண்டா ஜாஸ் கார் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. வெளிநாடுகளில் இந்த கார் ஹோண்டா ஃபிட் என்ற பெயரில் விற்பனையாகிறது. இந்த நிலையில், ஹோண்டா ஜாஸ் கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட நான்காம் தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரின் சோதனை ஓட்ட படங்கள் அடிக்கடி வெளியாகி வந்தன. இந்த நிலையில், ஹோண்டாவின் தாயகமான ஜப்பானில் அடுத்த மாதம் துவங்க இருக்கும் டோக்கியோ மோட்டார் ஷோவில் இந்த புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் காரின் டிசைன் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஜாஸ் காரின் பாரம்பரிய டிசைன் அம்சங்கள் புதிய தலைமுறை மாடலிலும் தக்க வைக்கப்பட்டுள்ளது. எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் டெயில் லைட்டுகள் இடம்பெற இருக்கின்றன.

இந்த காரில் புதிய எஞ்சின் தேர்வுகள் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த காரில் புதிய 1.2 லிட்டர் அல்லது 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஹைப்ரிட் சிஸ்டம் பயன்படுத்தப்பட இருக்கிறதது. அத்துடன், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா ஜாஸ் கார் இந்தியாவில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் எதிர்பார்க்கலாம். இந்த காரின் எஞ்சின்கள் இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.

புதிய ஹோண்டா ஜாஸ் கார் 3,990 மிமீ நீளத்துடன் வர இருக்கிறது. இதனால், இந்தியாவில் 4 மீட்டருக்குள் உருவாக்கப்படும் கார்களுக்கான வரிச்சலுகையை பெற முடியும். ஆனால், அகலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், உட்புறத்தில் அதிக இடவசதியையும், பூட்ரூம் கொள்திறனையும் வழங்கும்.

அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் இந்தியாவில் புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் காரை எதிர்பார்க்கலாம். மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, டொயோட்டா க்ளான்ஸா ஆகிய கார்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








