அசத்தலான சிறப்பம்சங்களுடன் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி!
புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம் குறித்து கசிந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக ஹூண்டாய் க்ரெட்டா விளங்குகிறது. இந்த நிலையில், ஹூண்டாய் க்ரெட்டா சந்தையை குறிவைத்து பல புதிய மாடல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்க வைக்கும் விதத்தில் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் நடந்த ஷாங்காய் ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஹூண்டாய் ஐஎக்ஸ்25 எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையிலான மாடல்தான் இந்தியாவில் க்ரெட்டா பிராண்டில் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே, புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருவது உறுதியான விஷயம்தான். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

இதைத்தொடர்ந்து, 2020ம் ஆண்டு மார்ச்சில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று ஆட்டோமொபைல் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், வரும் 20ந் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய கியா செல்டோஸ் காரின் எஞ்சின் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் பகிர்ந்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் அறிமுகம் செய்யப்படும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான தரத்தை பெற்றிருக்கும்.

இந்த எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். அதாவது, எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளும் முற்றிலும் மேம்பட்டதாக இருக்கும்.

அண்மையில் விற்பனைக்கு வந்த ஹூண்டாய் வெனியூ காரில் கொடுக்கப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை புளூலிங்க் செயலி மூலமாக ஸ்மார்ட்ஃபோனுடன் இணைத்து பல்வேறு வசதிகளை பெற முடியும். எஞ்சின், ஏசி சிஸ்டத்தை ஸ்மார்ட்போன் மூலமாக ரிமோட் முறையில் கட்டுப்படுத்த முடியும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரிலும் இதே வசதி கொடுக்கப்படும். இது நிச்சயம் க்ரெட்டா காரின் மதிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இதற்காக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் சிம் கார்டு பொருத்தப்பட்டு நேரடி இணைய வசதியை பெறும் வசதியுடன் வருகிறது.

முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சிறப்பான கட்டமைப்பு தரத்துடன் புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் வர இருக்கிறது. ரூ.11 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








