புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரின் சோதனை ஓட்டப் படங்கள்!
புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார் சோதனை ஓட்டப் படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. ஸ்பை படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் காரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் சிறந்த மாற்றுத் தேர்வுகளில் ஒன்றாக ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார் உள்ளது. ஆனால், ஹூண்டாய் எதிர்பார்க்கும் அளவுக்கு விற்பனை இல்லை.

இந்த நிலையில், சந்தைப்போட்டி, புதிய பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களுடன் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் ஸ்பை படங்களை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டுள்ளது.

வரும் 20ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் டிசைன் அம்சங்கள் புதிய எக்ஸ்சென்ட் காரிலும் இடம்பெற்றிருப்பது தெரிகிறது. வி வடிவிலான எல்இடி பகல்வேளை விளக்குகள், வட்ட வடிவிலான விளக்குகள், பம்பரில் ரிஃப்ளெக்டர்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இன்டீரியரும் கூட புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் காரை ஒத்திருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புதிய மாடலில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் இடம்பெறும்.

இந்த காரின் பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஹெட்ரெஸ்ட்டுகள், சென்டர் ஆர்ம் ரெஸ்ட் மற்றும் புதிய வண்ணத்திலான இன்டீரியர் மற்றும் இருக்கை கவர்கள் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டாலும், தற்போது விற்பனையில் உள்ள எக்ஸ்சென்ட் கார் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனத்தின் பாணியில் தற்போதைய மாடலானது டாக்சி மார்க்கெட்டிற்கு மட்டும் விற்பனை செய்யப்படும்.

புதிய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார் கூடுதல் விலையில் அறிமுகம் செய்யப்படும். மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். புதிய சிறப்பம்சங்கள் மூலமாக வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications