புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் அறிமுக விபரம்
புதிய மாருதி ஆல்ட்டோ கார் விரைவில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் மாருதி ஆல்ட்டோ. மாதத்திற்கு 20,000க்கும் அதிகமான ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப மாருதி ஆல்ட்டோ கார் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ரெனோ க்விட் காருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மாருதி நிறுவனம் புதிய தலைமுறை ஆல்ட்டோ காரை எஸ்யூவி போன்ற ஸ்டைலில் உருவாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த ஃப்யூச்சர் எஸ் என்ற கான்செப்ட் மாடலின் அடிப்படையில் இந்த புதிய தலைமுறை ஆல்ட்டோ கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவே, எஸ்யூவி டிசைன் தாத்பரியங்களுடன் புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ வருவது உறுதியாகி இருக்கிறது.

புதிய வேகன் ஆர் உருவாக்கப்பட்ட மாருதியின் ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில்தான் புதிய மாருதி ஆல்ட்டோ காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஒப்பான அம்சங்களை பெற்றிருக்கும். அத்துடன், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது.

அதாவது, மாருதி ஆல்ட்டோ கே10 மாடலில் இருக்கும் எஞ்சின் தொடர்ந்து தக்க வைக்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் சிறப்பான செயல்திறனையும், மைலேஜையும் வழங்கும் என்று நம்பலாம். ஏனெனில், பிஎஸ்-6 தரத்தில் வரும் இந்த எஞ்சின் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான மாசு உமிழ்வு திறனையும் பெற்றிருக்கும்.

தற்போதைய ஆல்ட்டோ காரைவிட புதிய ஆல்ட்டோ கார் இடவசதியில் சிறப்பான மாடலாக இருக்கும். அத்துடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் மற்றும் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கும்.

வரும் ஜூலை மாதம் புதிய மாருதி ஆல்ட்டோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஹூண்டாய் சான்ட்ரோ, ரெனோ க்விட் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு தொடர்ந்து நெருக்கடியை தரும்.


Click it and Unblock the Notifications








