மின்சார மாடலாக மாறும் போர்ஷே மசான் சொகுசு எஸ்யூவி கார்!
போர்ஷே மசான் எஸ்யூவி காரை மின்சார மாடலாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

சொகுசு எஸ்யூவி ரக கார்களில் போர்ஷே நிறுவனத்தின் மசான் எஸ்யூவி உலக அளவில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தனித்துவமான டிசைன் அம்சங்கள் மற்றும் சிறப்பான திறன் ஆகியவற்றால் வாடிக்கையாளர்களின் மனதில் சிம்மாசனம் போட்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 86,000 போர்ஷே மசான் எஸ்யூவி ரக கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சொகுசு எஸ்யூவி கார் மார்க்கெட்டில் ஓர் சிறந்த தேர்வாகவும், போட்டியாளர்களுக்கு சவாலான மாடலாகவும் இருந்து வருகிறது.

இந்த சூழலில், அடுத்த தலைமுறை மசான் எஸ்யூவியை முழுவதும் மின்சார மாடலாக அறிமுகம் செய்ய போர்ஷே கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய தலைமுறை போர்ஷே மசான் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த காரின் உற்பத்தி துவங்கும் என தெரிகிறது.

போர்ஷே நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒலிவர் புளூம் கூறுகையில்,"மின்சார வாகனத்துறையுடன் போர்ஷே இயைந்து செயலாற்றி வருகிறது. வரும் 2022ம் ஆண்டில் 6 மில்லியன் யூரோக்களை மின்சார வாகன உருவாக்கத்திற்காக முதலீடு செய்ய இருக்கிறோம். வரும் 2025ம் ஆண்டில் எங்களது 50 சதவீத வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்ற திட்டமிட்டிருக்கிறோம்," என்று கூறி இருக்கிறார்.

இதனிடையே, மசான் எஸ்யூவியை முழுவதுமாக மின்சார மாடலாக களமிறக்கும் பணிகளில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிரிமீயம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக் (PPE) என்ற புதிய கட்டமைப்பு கொள்கையில்தான் இந்த மசான் எஸ்யூவி உருவாக்கப்படுகிறது.

இந்த பிபிஇ என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையானது ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் ஆடி மற்றும் போர்ஷே ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

போர்ஷே நிறுவனத்தின் டைகன் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்படும் 800 வோல்ட் சார்ஜிங் சிஸ்டம்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. இதனால், வெறும் 20 நிமிடங்களில் காரின் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் ஏற்றிவிட முடியும்.


Click it and Unblock the Notifications








