புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!
பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் ரஷ்யாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதே மாடல்தான் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ரேபிட் கார் மிக முக்கிய தேர்வாக உள்ளது. அருமையான டிசைன், வலுவான கட்டமைப்பு, செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் தனி வாடிக்கையாளர் வட்டத்தை தக்க வைத்து வருகிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக ஸ்கோடா ரேபிட் கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

முதலில் ரஷ்யாவில் விற்பனைக்கு வர இருக்கும் இதே ஸ்கோடா ரேபிட் கார் இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. பிற நாடுகளில் சிறிய அளவிலான மாற்றங்களுடன் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.

தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கோடா ரேபிட் காரிலிருந்து புதிய ரேபிட் கார் டிசைனில் முற்றிலும் மாறுபட்ட மாடலாகவும், வசீகரமாகவும் மாறி இருக்கிறது. ஸ்கோடா நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் அமைப்புடன் வந்தாலும் முகப்பு மிக நேர்த்தியாகவும், சிறப்பாகவும் இருக்கிறது.

அதேபோன்று, பக்கவாட்டிலும், பின்புற டிசைனும் மிக அழகாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்கோடா ரேபிட் காரின் பின்புற டிசைன் நாட்ச்பேக் வகை மாடல் போன்று டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. பின்புற விண்ட்ஷீல்டு அமைப்புடன் பூட்ரூம் மிக நெருக்கமாக இருப்பதால், இதுபோன்ற தோற்றத்தை பெற்றிருக்கிறது.

இந்தியாவில் புதிய ஸ்கோடா ரேபிட் கார் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த பிளாட்ஃபார்மில் புதிய எஸ்யூவி மாடல்களும் உருவாக்கப்பட இருக்கின்றன.

ரஷ்யாவில் வெளியாகி இருக்கும் புதிய ஸ்கோடா ரேபிட் காரில் 1.6 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெடரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன. இதில், 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவர் மற்றும் 110 பிஎஸ் பவரை அளிக்கும் இரண்டு மாடல்களிலும், 1.4 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 125 பிஎஸ் பவரையும் அளிக்க வல்லதாக இருக்கும்.

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். வெளிநாடுகளில் இந்த எஞ்சின் 94 பிஎச்பி பவரையும், 174 என்எம் டார்க் திறனையும் வழங்கும் ஒரு மாடலிலும், 113 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும் மற்றொரு மாடலிலும் கிடைக்கிறது. இந்தியாவில் தற்போது 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. டீசல் மாடல் நிச்சயம் விற்பனைக்கு இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

இந்த காரில் 6.5 அங்குலம் அல்லது 8 அங்குல தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனங்கள் பயன்படுத்தப்படும். முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. உயர் வேரியண்ட்டுகளில் ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ரஷ்யாவில் இந்திய மதிப்பில் ரூ.9.25 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. வரும் 2021ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








