அசத்தும் புதிய ஹோண்டா சிட்டி ஆர்எஸ் டர்போ மாடலின் சிறப்பம்சங்கள்!
புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஆர்எஸ் டர்போ மாடலின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஹோண்டா சிட்டி கார் அண்மையில் தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தலைமுறை ஹோண்டா அக்கார்டு, சிவிக் கார்களின் டிசைன் அம்சங்களுடன் பரிமாணத்திலும் பெரிய கார் மாடலாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி காரில் முதல்முறையாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஆர்எஸ் டர்போ என்ற புத்தம் புதிய மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ஹோண்டா சிட்டி பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி காரின் சாதாரண ஸ்டான்டர்டு மாடலைவிட இந்த புதிய மாடல் சக்திவாய்ந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருப்பதுடன், அதிக வசீகரத்தை பெறும் வகையில், கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் நகாசு வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா சிட்டி ஆர்எஸ் டர்போ மாடலில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. ஹெட்லைட் க்ளஸ்ட்டரின் பின்னணி கரும்பூச்சுடன் அதிக கவர்ச்சியாக இருக்கிறது.

அதேபோன்று, முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்கும் பம்பர் அமைப்பு, கருப்பு வண்ண பாகங்கள், ரியர் ஸ்பாய்லர் ஆகியவையும் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. சாதாரண ஹோண்டா சிட்டி மாடலில் 15 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்த ஆர்எஸ் டர்போ மாடலில் 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வெளிப்புறத்தில் ஏராளமான கவர்ச்சி அம்சங்கள் இடம்பெற்றிருப்பது போன்றே, உட்புறத்திலும் உள்ளன. சிவப்பு வண்ண அலங்கார வேலைப்பாடுகளுடன் உட்புறம் அலங்காரமாக இருக்கிறது. அத்துடன், உயர்தர ஃபேப்ரிக் இருக்கைகள் பிரிமீயமான உணர்வை வழங்குகிறது.

இந்த காரில் புதிதாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொடுக்கப்படுகிறது. இந்த எஞ்சின் 122 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த எஞ்சினுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர்த்து, தாய்லாந்தில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படும்.

அதேநேரத்தில், இந்தியாவில் கூடுதலாக 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் வர இருக்கிறது. ஏற்கனவே பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு மேம்படுத்தப்பட உள்ளன. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஹைப்ரிட் எரிநுட்பத்தில் வர இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி காரின் ஆர்எஸ் டர்போ மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. மேலும், மாருதி சியாஸ், விரைவில் வரும் புதிய ஹூண்டாய் வெர்னா கார்களை எதிர்கொள்ள கூடுதல் தேர்வாக இந்த ஆர்எஸ் டர்போ சிட்டியை ஹோண்டா கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் ஹோண்டா இந்தியா நிறுவனத்திடமிருந்து இல்லை. அடுத்த ஆண்டு ஏப்ரலில் மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போது இந்த புதிய தலைமுறை சிட்டி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








