புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரில் புளூலிங்க் தொழில்நுட்ப வசதி!
புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரில் இடம்பெற இருக்கும் தொழில்நுட்ப வசதி குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹூண்டாய் எலான்ட்ரா கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் 3ந் தேதி புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த காருக்கான முன்பதிவும் கூட துவங்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், இந்த காரில் இடம்பெற இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் வழங்கப்படும் புளூலிங்க் என்ற விசேஷ தொழில்நுட்ப செயலி இந்த புதிய எலான்ட்ரா காரிலும் வழங்கப்பட இருக்கிறது.
அதாவது, ஹூண்டாய் எலான்ட்ரா காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் சிம் கார்டு பொருத்தப்பட்டு நேரடி இணைய வசதியை பெற்றிருக்கும். எனவே, இந்த புளூலிங்க் செயலியை ஸ்மார்ட்ஃபோனில் இணைத்துக் கொண்டால், ரிமோட் முறையில் ஏராளமான தகவல்களை பெறுவதற்கும், காரின் சில முக்கிய வசதிகளை வெளியில் இருந்தே கட்டுப்படுத்துவதற்கும் துணை புரியும்.
புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரில் வழங்கப்பட இருக்கும் புளூலிங்க் செயலி மூலமாக 34 விதமான வசதிகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10 விதமான வசதிகள் இந்தியாவிற்காக விசேஷமான முறையில் வழங்கப்பட்டுள்ளதாம். இந்த வசதியை பெறும் இந்தியாவின் முதல் எக்ஸிகியூட்டிவ் செடான் கார் மாடலாகவும் குறிப்பிடலாம்.

ஜியோ ஃபென்சிங் முறையில் கார் குறிப்பிட்ட பகுதியை விட்டு வெளியே செல்ல முடியாதவாறு கட்டுப்படுத்தும் வசதி, எஞ்சின், ஏசி உள்ளிட்டவற்றை ஸ்மார்ட்போன் மூலமாக கட்டுப்படுத்தும் வசதி, அவசர கால அழைப்புகளை மேற்கொள்ளுதல் என ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளை புளூலிங்க் செயலி வழங்கும் என்று தெரிகிறது.
புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் முதலில் பெட்ரோல் எஞ்சின் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சில மாதங்களில் டீசல் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
புதிய ஹூண்டாய் எலான்ட்ரா காரில் விபத்தின்போது அவசர உதவி மையங்களுக்கு தானியங்கி முறையில் தகவல் அனுப்பும் வசதி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், காரின் இருப்பிடத்தை நிகழ்நேர முறையில் அறிந்து கொள்ளும் வசதி, பல்முனை பாதுகாப்பை வழங்கும் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் உத்தேசமாக ரூ.14 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையிலான விலையில் எக்ஸிகியூட்டிவ் செடான் மார்க்கெட்டில் களமிறங்க உள்ளது. ஹோண்டா சிவிக், டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் ஸ்கோடா ஆக்டேவியா உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








