மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் ஹூண்டாய்!!
ஹூண்டாய் நிறுவனத்தின் எம்பிவி கார் அறிமுகம் செய்யப்படுவது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் சந்தைப் பங்களிப்பை உயர்த்துவதற்கு பல புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வர்த்தக வாய்ப்பு அதிகம் உள்ள எம்பிவி சந்தையில் புதிய மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவிலேயே ஹெக்ஸா ஸ்பேஸ் என்ற கான்செப்ட் எம்பிவி கார் மாடலை காட்சிப்படுத்தியிருந்தது. ஆனால், அதனை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தாமல், திட்டத்தை கைவிட்டது. இந்த நிலையில், தற்போது இந்த ரக கார்களுக்கான வரவேற்பை பார்த்து, மீண்டும் எம்பிவி கார் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இந்திய கார் மார்க்கெட்டிற்கான சிறப்பம்சங்களுடன் புத்தம் புதிய எம்பிவி கார் மாடலை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது. கடந்த மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வெனியூ எஸ்யூவி கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் புதிய எம்பிவி காரும் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் சிறப்பான டிசைன் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கும்.புதிய ஹூண்டாய் எம்பிவி கார் மாடலானது 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வரும். போட்டியாளர்களைவிட மேம்பட்ட இடவசதி மற்றும் இதர வசதிகளை பெற்றிருக்கும்.

கியா செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் எஞ்சின் தேர்வுகள் புதிய ஹூண்டாய் எம்பிவி காரில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக அறிமுகம் செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.

புதிய ஹூண்டாய் எம்பிவி கார் ரூ.10 லட்சத்தையொட்டி பட்ஜெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில், போட்டியாளர்களைவிட சற்றே பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படலாம்.

வரும் 2021ம் ஆண்டு இந்த புதிய ஹூண்டாய் எம்பிவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மாருதி எர்டிகா, மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுடன் போட்டி போடும்.
Source: Express Drives


Click it and Unblock the Notifications