புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!
புதிய ஹூண்டாய் வெனியூ காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அதிக வர்த்தக வாய்ப்புள்ள காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதிரடியாக களமிறங்க உள்ளது. வெனியூ என்ற பெயரில் உருவாக்கப்பட்டு இருக்கும் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட அந்த எஸ்யூவி மாடல் வரும் 17ந் தேதி உலக அளவில் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த நிலையில், தற்போது இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவின் பல்வேறு சீதோஷ்ண நிலைகளிலும் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில், அடுத்த மாதம் 21ந் தேதி புதிய வெனியூ எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்்திரா எக்ஸ்யூவி300 ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு நேரடியாக போட்டியாக வரும் இந்த புதிய எஸ்யூவி மாடலில் புதுமையான தொழில்நுட்ப வசதிகளை ஹூண்டாய் கொடுக்க இருக்கிறது.

மேலும், அண்மையில் வெளியான படங்களில் இந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களை கவரும் டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை நிரம்பவே பெற்றிருப்பது உறுதியாகி இருக்கிறது. முதல்முறையாக இந்த எஸ்யூவியில் புளூலிங்க் என்ற தொடர்பு வசதி கொடுக்கப்பட இருக்கிறது. அதாவது, எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் இருப்பது போன்று 33 விதமான வசதிகளை வழங்கும் தொழில்நுட்பமாக இருக்கும்.

வோடஃபோன் சிம்கார்டு மூலமாக இந்த காருக்கான நேரடி இணைய வசதி பெறமுடியும். குறிப்பிட்ட பகுதிக்கு மேல் கார் செல்லாத வகையில் காரை கட்டுப்படுத்தி வைக்கும் ஜியோ ஃபென்சிங் தொழில்நுட்பம், அவசர கால உதவி கோரும் தகவல் தொழில்நுட்ப முறை, அதிவேக எச்சரிக்கை வசதிகளை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக பெற முடியும்.

ஸ்மார்ட்போனை ரிமோட் கன்ட்ரோல் போன்று பயன்படுத்தி எஞ்சின் ஸ்டார்ட், ஹெட்லைட்டை இயக்குவது, ஹாரன் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் வசதியும் வர இருக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் விஷயமாக இருக்கும்.

வாய்ஸ் கமாண்ட், நேவிகேஷன் வசதிகளையும் இந்த இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தின் மூலமாக பெற முடியும். போக்குவரத்து நெரிசல் குறித்த நிகழ்நேர தகவல்களை உடனுக்குடன் பெறும் வசதியும் இடம்பெற இருக்கிறது.

இந்த காரில் முகப்பில் பிரம்மாண்ட க்ரோல் க்ரில் அமைப்பு, டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் போன்று சற்றே கீழாக பொருத்தப்பட்ட ஹெட்லைட்டுகள், ஃபோக்ஸ்வேகன் போலோ கார் போன்று சதுர வடிவிலான டெயில் லைட்டுகள், ஆகியவை முக்கிய டிசைன் அம்சங்களாக கூறலாம்.

இந்த காரில் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் வழங்கப்பட இருக்கிறது. இதனுடன் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். அத்துடன், 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படும்.

ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் 21ந் தேதி விற்பனைக்கு வந்த உடனே, டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








