ஜாகுவார் எக்ஸ்இ ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
புதிய ஜாகுவார் எக்ஸ்இ ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், எஞ்சின் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஜாகுவார் எக்ஸ்இ கார் டிசைன் மற்றும் தொழில்நுட்ப அளவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்திருக்கும் இந்த கார் தலா இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

இதன் ரகத்தில் மிக அழகிய செடான் கார் தேர்வாக புதிய ஜாகுவார் எக்ஸ்இ இருக்கிறது. ஜாகுவார் கார்களின் முத்திரைக்கு சான்றாக விளங்கும் பெரிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. அழகிய வடிவமைப்புடன் புதிய அலாய் வீல்கள் வசீகரிக்கின்றன.

இந்த காரின் டேஷ்போர்டு அமைப்பு குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் பிரிமீயமாக மாறி இருக்கிறது. இரட்டை தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேற்புற திரை மூலமாக இணைப்பு வசதிகள், நேவிகேஷன் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளையும், கீழ்பக்கம் உள்ள திரை மூலமாக ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய செயலிகளையும் சப்போர்ட் செய்யும். இந்த காரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. இது ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை எளிதாக பெற வழிவகுக்கிரது. எஃப்- பேஸ் காரில் இருக்கும் அதே ஸ்டீயரிங் வீல் ஆகியவையும் முக்கிய மாற்றங்களாக இருக்கும்.

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் இன்ஜெனியம் குடும்ப வரிசையை சேர்ந்த 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 247 பிஎச்பி பவரையும், டீசல் மாடல் அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இந்த காரின் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு நிகரானவையாக வந்துள்ளன. இந்த இரண்டு எஞ்சின்களுமே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய ஜாகுவார் எக்ஸ்இ காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் ரூ.44.98 லட்சம் முதல் ரூ.46.32 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். புதிய ஜாகுவார் எக்ஸ்இ கார் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் மற்றும் ஆடி ஏ4 ஆகிய சொகுசு கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
| Variants | Petrol | Diesel |
| Jaguar XE S | Rs 44.98 Lakhs | Rs 44.98 Lakhs |
| Jaguar XE SE | Rs 46.32 Lakhs | Rs 46.32 Lakhs |


Click it and Unblock the Notifications








