காம்பஸ் எஸ்யூவியை தொடர்ந்து ரெனிகேட்... ஜீப் நிறுவனத்தின் அடுத்த அஸ்திரம்!
காம்பஸ் எஸ்யூவியின் மூலமாக இந்தியர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கும் ஜீப் நிறுவனம் அடுத்த அஸ்திரமாக ரெனிகேட் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார் இந்தியர்களை பெரிதும் வசியம் செய்து கட்டிப் போட்டுவிட்டது. இந்த ரகத்தின் முதல் தேர்வாகவும் இருந்து வருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஃபியட் கார்களின் விற்பனை அதள பாதாளத்தில் கவிழந்த நிலையில், ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஃபியட் க்றைஸ்லர் நிறுவனத்திற்கு இந்தியாவில் சிறப்பான வர்த்தக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதனால், டீலர்களை அதிகரிக்கும் பணிகளிலும் மும்முரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், ஜீப் காம்பஸ் எஸ்யூவியை போன்று இந்தியர்களை வசியம் செய்யும் விதத்தில், அடுத்து ஒரு புதிய எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது, தனது ரெனிகேட் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியைவிட விலை குறைவான தேர்வாக இருக்கும் என்பதால், இந்த எஸ்யூவி இந்தியர்களிடம் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, ரூ.10 லட்சம் பட்ஜெட் மார்க்கெட்டில் இந்த புதிய எஸ்யூவியை களமிறக்க ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய எஸ்யூவி வரும் 2020ம் ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அடுத்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு களமிறக்கப்படும்.

புதிய கியா எஸ்பி, நிஸான் கிக்ஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுடன் இந்த புதிய ஜீப் ரெனிகேட் போட்டி போடும். இந்த எஸ்யூவியை இந்தியாவில் உற்பத்தி செய்ய ஃபியட் க்றைஸ்லர் குழுமம் திட்டமிட்டுள்ளதால், விலையும் மிக சவாலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது.

ஜீப் காம்பஸ் போன்றே, வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. இதனால், இந்த கார் மூலமாக இந்தியாவில் மிக வலுவான சந்தையை தக்க வைத்துக் கொள்வதற்கு ஃபியட் க்றைஸ்லர் குழுமம் திட்டம் போட்டு வைத்துள்ளது.

புதிய ஜீப் ரெனிகேட் எஸ்யூவியில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின்கள் பயன்படுத்தப்படும். இதன் முக்கிய சிறப்பம்சம், 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் ஆஃப்ரோடு தகவமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களுடன் வர இருக்கிறது. அதாவது, போட்டியாளர்களைவிட இதன் முக்கிய சிறப்பம்சமாக ஆஃப்ரோடு தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கும்.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியைவிட விலை குறைவாக நிர்ணயிக்கப்படும். அதாவது, ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சத்திற்குள் ஆரம்ப விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால், இந்த எஸ்யூவி இப்போதே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications








