ரொம்ப பவர்ஃபுல்லான எஞ்சினுடன் வருகிறது மஹிந்திரா எக்ஸ்யூவி300!
அதிசக்திவாய்ந்த புதிய எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி மிகவும் சக்திவாய்ந்த பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான புதிய எஞ்சின் தேர்வுகளுடன் விரைவில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பிஎஸ்-6 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட மாடல் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட சாங்யாங் டிவோலி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அறிமுகம் செய்யப்பட்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சாங்யாங் டிவோலி எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 161 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆனால், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் இதே எஞ்சின் 135 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, இப்போது பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைவிட 20 பிஎச்பி கூடுதல் பவரையும், 30 என்எம் கூடுதல் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலமாக, காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக அதிக செயல்திறன் மிக்க மாடலாக இருக்கும் என்பதுடன், கியா செல்டோஸ் உள்ளிட்ட மாடல்களுக்கும் போட்டியாக மாறும்.

மறுபுறத்தில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த எஞ்சின் 115 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியானது வரும் நவம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திராவின் முதல் பிஎஸ்-6 பெட்ரோல் மாடலாகவும் வருகிறது. ஹூண்டாய் வெனியூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா ஹாரியர் எஸ்யூவிகளுடன் போட்டி போடும்.
Source: Zigwheels


Click it and Unblock the Notifications








