ரூ.2.94 லட்சத்தில் புதிய மாருதி ஆல்ட்டோ 800 கார் அறிமுகம்!
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி ஆல்ட்டோ கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் மாருதி ஆல்ட்டோ. இந்த கார் 800சிசி மற்றும் 1000சிசி எஞ்சின் திறன்களில் கிடைக்கிறது. இந்த நிலையில், 800சிசி மாடல் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக, மாருதி ஆல்ட்டோ காரின் 800சிசி பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் இருக்கும் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 796சிசி எஞ்சின் அதிகபட்சமாக 48 பிஎச்பி பவரையும், 69 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி ஆல்ட்டோ 800 மாடலில் புதிய முன்புற க்ரில் அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. பம்பர் அமைப்பிலும் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 12 அங்குல ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை கருப்பு அல்லது சில்வர் வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய மாருதி ஆல்ட்டோ 800 காரில் புதிய டியூவல் டோன் டேஷ்போர்டு பொருத்தப்பட்டு இருக்கிறது. யுஎஸ்பி போர்ட், புளூடூத், ஆக்ஸ் இன் போர்ட் வசதிகளுடன் கூடிய டபுள் டின் மியூசிக் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சமாக இருக்கிறது.

இந்த காரில் ஓட்டுனருக்கான ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் ரிமைன்டர் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக இடம்பெற்றுள்ளன.

புதிய மாருதி ஆல்ட்டோ 800 கார் ரூ.2.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ரெனோ க்விட் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

இதனிடையே, புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ காரும் உருவாக்கப்பட்டுவிட்டது. தற்போது தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் இந்த கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு களமிறக்கப்படும் என்று அண்மை செய்திகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








