எஸ்யூவி ஸ்டைலில் வரும் மாருதியின் அட்டகாசமான 'லோ' பட்ஜெட் கார்!
எஸ்யூவி ஸ்டைலில் வரும் மாருதியின் புதிய பட்ஜெட் காரின் புதிய ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் மிக குறைவான பட்ஜெட் கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ க்விட் கார் பெரும் ஹிட்டடித்தது. நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதிக்கு ரெனோ க்விட் காருக்கு கிடைத்த வரவேற்பு ரொம்பவே யோசிக்க வைத்ததுடன், இந்த ரகத்தில் புதிய கார் மாடலை களமிறக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

அதன்படி, கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த மாருதி நிறுவனத்தின் ஃப்யூச்சர் எஸ் என்ற கான்செப்ட் மாடலின் அடிப்படையில் புதிய மைக்ரோ எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த கார் தீவிரமான இறுதிக்கட்ட சாலை சோதனை ஓட்டங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது.

முழுவதும் அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் சோதனையில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் புதிய ஸ்பை படங்கள் கார்டாக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்பை படங்களில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் மிக அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருப்பது தெரிகிறது.

மேலும், மைக்ரோ எஸ்யூவி போன்ற மிக அடக்க வகை எஸ்யூவி காராக தோற்றமளிக்கிறது. புதிய மாருதி ஸ்விஃப்ட், டிசையர், இக்னிஸ், எர்டிகா கார்கள் உருவாக்கப்பட்ட ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில்தாான் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிகிறது. இந்த கார் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வருகிறது. அதேபோன்று, இருக்கைகளும் மிக உயர்த்தப்பட்ட அமைப்புடன் சவுகரியமாக இருக்கும்.

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வர இருக்கிறது.

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் கார் மார்க்கெட்டில் ரெனோ க்விட், மஹிந்திரா கேயூவி100 ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.
Image Courtesy:Cartoq


Click it and Unblock the Notifications







