மாருதி எஸ் பிரெஸ்ஸோ மைக்ரோ எஸ்யூவி அறிமுக விபரம்!
மாருதி எஸ் பிரெஸ்ஸோ என்ற மைக்ரோ எஸ்யூவி வகை காரின் அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் ஃப்யூச்சர் எஸ் என்ற பெயரிலான கான்செப்ட் கார் மாடல் ஒன்றை மாருதி சுஸுகி நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த மாடலை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தும் பணிகளையும் மாருதி மேற்கொண்டது.

மேலும், இந்த தயாரிப்பு நிலை மாடலானது கடந்த சில மாதங்களாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இந்த புத்தம் புதிய மாடலானது பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய மாடலானது மாருதி எஸ் பிரெஸ்ஸோ என்ற பெயரில் வர இருப்பதாக தகவல்கள் வெளியானது. எஸ்யூவி ஸ்டைலில் குறைவான விலை கொண்ட மாருதி கார் மாடல் என்பதால், பட்ஜெட் கார் வாங்க திட்டமிட்டிருப்போர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்த புதிய கார் மாடலானது வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கார் மாருதியின் அரேனா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ரெனோ க்விட் மற்றும் மஹிந்திரா கேயூவி100 போன்ற பட்ஜெட் விலை கார் மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும். அடக்கமான வடிவமைப்பு, அதிக க்ரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் எஸ்யூவி ஸ்டைல் போன்றவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும், அடர் சாம்பல் வண்ண இன்டீரீயர் தீம், உட்புறத்தில் சில அலங்கார ஆக்செஸரீகளுடன் கவரும் வகையில் இருக்கும்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சிஸ்டம், அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் வசதிகள் இடம்பெறும் என தெரிகிறது.

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் மாருதி ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. இந்த கார் மாடலானது சிஎன்ஜி எரிபொருள் வகையிலும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் ரூ.4 லட்சம் பட்ஜெட்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு இந்த புதிய மாடல் சிறப்பான தேர்வாக அமையும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








