இன்னும் சரியாக எட்டே நாட்கள்தான்... அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?
செப்டம்பர் 1ம் தேதிக்கு இன்னும் சரியாக 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மத்திய அரசு அதிரடி காட்ட முழு வீச்சில் தயாராகி வருகிறது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகிலேயே சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரிவர கடைபிடிப்பதில்லை. இதுதான் சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர்.

எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வைக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிக தீவிரமாக எடுத்து வருகிறது. இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை பல மடங்கு உயர்த்துவதும் ஒன்றாகும்.

தண்டனைகள் கடுமையாக இல்லாததன் காரணமாகவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதில்லை என மத்திய அரசு கருதுகிறது. எனவே அபராத தொகையை கடுமையாக்கினால், அவர்கள் மாறுவார்கள் எனவும் மத்திய அரசு நம்புகிறது. இதன் காரணமாக மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா சமீபத்தில்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் மிக கடுமையான முயற்சிகளுக்கு பின் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சூழலில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிக அபராதம் உள்பட திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் 63 விதிகள் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் புதிய வெப்சைட் தொடக்க நிகழ்ச்சி புது டெல்லியில் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 21) நடைபெற்றது.

இதில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். இதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதில் 63 விதிகளை செப்டம்பர் 1 முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''இந்த 63 விதிகளில் அபராதங்களை நாங்கள் உயர்த்தியுள்ளோம். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவது மற்றும் ஓவர்லோடு உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது'' என்றார்.

அத்துடன் இந்த விதிகள் அனைத்தையும் சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் நிதின் கட்கரி கூறினார். சட்ட ரீதியிலான ஆய்வுக்கு உதவும் வகையில் அவை சட்ட அமைச்சகத்திற்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் 2 முதல் 4 நாட்களுக்குள் அவர்கள் எங்களை தொடர்பு கொள்வார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கான அபராத தொகை 500 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் அது தற்போது அதிரடியாக 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. சாலை விபத்துக்களுக்கு இது மிக முக்கியமான காரணம். ஆனால் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முன்பு 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அது 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோல் பல்வேறு விதிமுறை மீறல்களுக்கும் அபராதம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இனி வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் அபராதம் செலுத்துவதில் இருந்து மட்டுமல்லாது விபத்துக்களில் இருந்தும் தப்பலாம்.


Click it and Unblock the Notifications








