குண்டு துளைக்காத அம்சத்துடன் புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி அறிமுகம்!
குண்டுதுளைக்காத அம்சங்களுடன் கூடிய ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

கோடீஸ்வரரர்களின் விருப்பமான எஸ்யூவி மாடலாக ரேஞ்ச்ரோவர் விளங்குகிறது. இந்த நிலையில், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதும் பெரும் பணக்காரர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தக்கவாறு குண்டுதுளைக்காத அம்சங்களுடன் கூடிய ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியை லேண்ட்ரோவர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் சிறப்பு வாகன வடிவமைப்புப் பிரிவு (SVO) இந்த எஸ்யூவியை வடிவமைத்துள்ளது. இந்த எஸ்யூவி ரேஞ்ச்ரோவர் சென்டினெல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

கண்ணி வெடித் தாக்குதல் மற்றும் துப்பாக்கி மூலமாக நடத்தப்படும் தாக்குதல்களிலிருந்து உள்ள பயணிப்பவர்களை பாதுகாக்கும் விதத்தில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக, இந்த எஸ்யூவியின் அடிப்பாகத்தில் அதிக தடிமன் கொண்ட விசேஷ உலோக தகடுகளுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோன்று, துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத சிறப்பு கொண்ட ஜன்னல் கண்ணாடிகள், விண்ட் ஷீல்டு கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அவசர சமயத்தில் அந்த இடத்திலிருந்து தப்புவதற்காக பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

சக்திவாய்ந்த ஐஇடி வெடிகுண்டு தாக்குதல்கள், 7.62 மிமீ குழல் கொண்ட துப்பாக்கிகளிலிருந்து வரும் குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளிலிருந்து இது பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்கும். அரசியல்வாதிகளுக்கு தக்கவாறு, காருக்குள் இருந்துகொண்டே வெளிப்புறத்தில் இருப்பவர்கள் மற்றும் கூட்டத்தினர் மத்தியில் பேசுவதற்கான வசதியும் இருக்கிறது.

நாட்டின் பெருந்தலைவர்கள் மற்றும் அரசுத் துறை பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு, இந்த எஸ்யூவியில் சைரென் மற்றும் சுழல் விளக்குகளும் பொருத்தி பெற்றுக் கொள்ள முடியும்.

கவச வாகனத்திற்குரிய அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருப்பதால், சாதாரண ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியைவிட ஒரு டன் அளவிற்கு கூடுதல் எடையை பெற்றிருக்கிறது. அதற்கு தக்கவாறு, இதன் சஸ்பென்ஷன், பிரேக் சிஸ்டம், சேஸீ ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

ரேஞ்ச்ரோவர் சென்டினெல் எஸ்யூவியில் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 375 பிஎச்பி பவரை அளிக்கும் திறனை பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை 10.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 193 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

இந்த காரில் ரன் ஃப்ளாட் எனப்படும் விசேஷ டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. துப்பாக்கி மூலமாக டயர்களை பஞ்சர் செய்தால் கூட, மணிக்கு 50 கிமீ வேகத்தில் தொடர்ந்து பயணிக்க முடியும்.

இந்த காரில் சிறப்பான உட்புற இடவசதி உள்ளது. லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டச் புரோ டூவோ என்ற 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய உயர்தர இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. உயர் துல்லிய தொடுதிரை அமைப்பும் இதன் சிறப்பாக கூறலாம்.

இங்கிலாந்தில் நடக்கும் பாதுகாப்பு மற்றும் காவல் துறைக்கான கண்காட்சியில் இந்த கார் அறிமுகமாகிறது. இது சாதாரண மாடலைவிட இரண்டு மடங்கு கூடுதல் விலை கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








