ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் டீசர் வெளியீடு!
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரெனோ க்விட் கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்த புதிய மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நேர் போட்டியாளராக கருதப்படும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டீசர் தொடர்ந்து வெளியிடப்படும் நிலையில், ரெனோ க்விட் காரின் முதல் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ க்விட் காரின் எலெக்ட்ரிக் மாடலான K-ZE காரின் டிசைன் தாத்பரியங்களுடன் புதிய ரெனோ க்விட் கார் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பது டீசர் மூலமாக தெரிய வருகிறது.

ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் பம்பரையொட்டி அமைக்கப்பட்டுள்ளன. டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் போன்ற அமைப்பை இவை வழங்குகின்றன. வழக்கமாக ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் இடம்பெறும் இடத்தில் இண்டிகேட்டர் மற்றும் பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பின்புறத்தில் சிறிய எல்இடி விளக்குகள் கொண்ட டெயில் லைட் க்ளஸ்ட்டர் மற்றும் ரிஃப்ளெக்டர்களுடன் கூடிய பம்பர் ஆகியவை கொடுக்கப்பட்டு மாறுதல் கண்டுள்ளது.

புதிய ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 8.0 அங்குல தொடுதிரையுடன் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புதிய ஸ்டீயரிங் வீல் அமைப்பு உள்ளிட்ட கூடுதல் சிறப்புகளுடன் வருகிறது.

புதிய ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரில் 54 பிஎச்பி பவரை வழங்கும் 800 சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 68 பிஎச்பி பவரை வழங்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் தக்க வைக்கப்படும். 1.0 லிட்டர் பெட்ரோல் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்.
இந்த எஞ்சின்கள் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

புதிய ரெனோ க்விட் கார் ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வரும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ காருக்கு நேரடி போட்டியாக இந்த கார் விற்பனைக்கு வர இருக்கிறது. கொடுக்கும் பணத்திற்கு மிகச் சிறந்த பட்ஜெட்டில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications








