முக்காடு போட்டு சுற்றும் ரெனோ எம்பிவி கார் - வீடியோ!
இந்திய மார்க்கெட்டிற்காக புதிய எம்பிவி ரக கார் மாடலை ரெனோ கார் நிறுவனம் உருவாக்கி இருக்ிகறது. RBC என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய எம்பிவி கார் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் ரெனோ ஆர்பிசி எம்பிவி காரின் வீடியோ ரஷ்லேன் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோ மூலமாக காரின் உருவ அமைப்பை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
புதிய ரெனோ எம்பிவி காரில் பல நவீன கால சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம். எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும் என்று நம்பலாம்.
ரெனோ க்விட் கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கார் புடைப்பான வீல் ஆர்ச்சுகள், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் ரெனோ கார்களின் முத்தாய்ப்பான டிசைன் அம்சங்களுடன் கூடிய முகப்பு ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
உட்புறம் போதுமான இடவசதியை அளிக்கும். இந்த காரில் சீட் பெல்ட் ரிமைன்டர் வசதி, அதிவேகம் குறித்த எச்சரிக்கை வசதி, பல ஏர்பேக்குகளுடன் கூடிய பாதுகாப்பு, இபிடியுன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.
புதிய ரெனோ ஆர்பிசி எம்பிவி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் மற்றும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும். டட்சன் கோ ப்ளஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

விரைவில் நடைமுறைக்கு வர இருக்கும் புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உகந்த கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் பெற்றிருக்கும். இந்த கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக மினி எம்பிவி கார் மாடலாக வர இருக்கிறது.
ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய எம்பிவி கார் எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய ஹேட்ச்பேக் காரை விரும்புவோருக்கு இது சிறந்த சாய்ஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








