புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார்ப்பரேட் எடிசன் மாடல் அறிமுகம்!
ஸ்கோடா ஆக்டேவியா காரின் விலை ரூ.1 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ஆக்டேவியா கார்ப்பரேட் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.
ஸ்கோடா ஆக்டேவியா காரின் கார்ப்பரேட் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

உலகின் பிரபலமான கார் நிறுவனங்களான செவர்லே, ஃபியட் போன்ற ஜாம்பவான்கள் இந்திய சந்தையில் கோட்டைவிட்டன. அதேபோன்ற, நிலை தனக்கும் வந்துவிடக்கூடாது என்பதை மனதில் வைத்து, இந்திய வர்த்தகத்தை தூக்கி நிறுத்தும் முயற்சிகளில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இறங்கி இருக்கிறது.

மேலும், புராஜெக்ட் 2.0 என்ற பெயரில் இந்திய வர்த்தகத்தை சீரமைக்கும் பணிகளில் ஸ்கோடா இறங்கி இருக்கிறது. அதன்படி, புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்யவும், இந்திய வாடிக்கையாளர்களை கவரும் விதத்திலான கார்களை உருவாக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன் முதல்படியாக, தனது பல பிரபல கார் மாடல்களை குத்தகை அடிப்படையில் வாங்கும் வாய்ப்பை இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஸ்கோடா நிறுவனம் வழங்கியது. இதைத்தொடர்ந்து, ஸ்கோடா சூப்பர்ப் காரின் விலை ரூ.2 லட்சம் வரை குறைத்து கார்ப்பரேட் எடிசன் என்ற பெயரில் அறிமுகம் செய்தது.

இதற்கடுத்து, இப்போது ஸ்கோடா ஆக்டேவியா செடான் காரின் விலையையும் ரூ.1 லட்சம் வரை குறைத்து களமிறக்கி உள்ளது. ஸ்கோடா ஆக்டேவியா கார்ப்பரேட் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.
பெட்ரோல் மாடலின் பேஸ் வேரியண்ட் விலை ரூ.50,000 வரையிலும், டீசல் மாடலின பேஸ் வேரியண்ட் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ஆக்டேவியா கார்ப்பரேட் பெட்ரோல் மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ.15.49 லட்சத்திலும், டீசல் பேஸ் வேரியண்ட் ரூ.16.99 லட்சத்திலும் களமிறக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா காரின் பெட்ரோல் மாடலில் 1.4 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் உள்ள 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.7 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜையும் வழங்கும் என ஸ்கோடா நிறுவனம் தெரிவிக்கிறது. பெட்ரோல் மாடல் 0- 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.1 வினாடிகளையும், டீசல் மாடல் 8.4 வினாடிகளையும் எடுத்துக் கொள்ளும்.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் க்வாட்ரா ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள்,, 16 அங்குல வெலோரம் அலாய் வீல்கள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. 16.51 செமீ அளவிலான தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், ஸ்மார்ட் லிங்க் தொழில்நுட்பம், 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் வசதிகள் உள்ளன.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார்ப்பரேட் எடிசன் காரில் 4 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட், ஆன்ட்டி ஸ்லிப் ரெகுலேஷன், எலக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மல்டி கொலிஷன் பிரேக்கிங் உள்ளிட்ட ஏராளமான பாதுகாாப்பு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








