கவர்ச்சிகரமான டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!
டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் நம்பர்-1 சாய்ஸாக டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி விளங்குகிறது. இந்த எஸ்யூவியில் கூடுதல் கவர்ச்சியான அம்சங்களை பெற்றிருக்கும் மாடலானது டிஆர்டி ஸ்போர்ட்டிவோ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் ஃபார்ச்சூனர் டிஆர்டி எஸ்யூவியானது இந்தியாவில் செலிபரசேஷன் எடிசன் என்ற பெயரில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஃபார்ச்சூனர் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப அளவில் மாற்றங்கள் இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளித்தாலும், தோற்றத்தில் பல மாறுதல்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், படுல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி செலிபரேஷன் எடிசன் மாடலானது வெள்ளை வண்ணத்தில் கருப்பு வண்ண கூரையுடன் கூடிய இரட்டை வண்ணக் கலவையில் வந்துள்ளது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் சிவப்பு வண்ண பேட்ஜுகளுடன் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் பில்லர்கள், ஸ்கிட் பிளேட் மற்றும் அலாய் வீல்கள் கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, கூரை வண்ணத்துடன் இயைந்து போகும் வகையில் கருப்பு வண்ண அலங்காரம் கொடுக்கப்பட்டுள்ளது.

உட்புறத்திலும் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணத்திலான இரட்டை வண்ணக் கலவை கொடுக்கப்பட்டு இருக்கிறது. கதவு பேனல்கள், இருக்கைகளில் டிஆர்டி பேட்ஜ் மற்றும் தையல் வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்ப்டடு இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் டிஆர்டி பேட்ஜ் உள்ளது. கியர் லிவர் மற்றும் ஸ்டீயரிங் வீலில் கார்பன் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்ட்டிவோ எஸ்யூவியில் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 174 பிஎஸ் பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இது பிஎஸ்-4 எஞ்சின் என்பதுடன், 2 வீல் டிரைவ் சிஸ்டத்தில் மட்டுமே கிடைக்கும்.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்ட்டி எஸ்யூவிக்கு ரூ.33.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்குவோரை கவர்ந்திழுக்கும் வகையில் தனித்துவமான தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








