புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் வருகை விபரம்!
புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் வெளியிடப்பட உள்ளது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிரிமீயம் ரக ஹேட்ச்பேக் கார்களில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஹோண்டா ஜாஸ் கார் விளங்குகிறது. வடிவமைப்பு, வசதிகள் மற்றும் நம்பகமான எஞ்சின்கள் என அனைத்து விதத்திலும் சிறந்த மாடல். இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து புதிய ஹோண்டா ஜாஸ் கார் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய தலைமுறை மாடல் இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற இருக்கும் டோக்கியோ மோட்டார் ஷோவில் ஹோண்டா கார் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஜாஸ் கார் 3,990 மிமீ நீளம் கொண்டதாக இருக்கும். இதன்மூலமாக, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட கார்களுக்கான வரிச் சலுகையை பெற முடியும். அதேநேரத்தில், அகலம் அதிகரிக்கப்பட இருக்கிறது. இதன்மூலமாக, கேபினல் அதிக இடவசதியை அளிக்கும் மாடலாக வர இருக்கிறது.

புதிய ஹோண்டா ஜாஸ் காரில் எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இந்த காரில் இடம்பெற இருக்கிறது.

தற்போது இந்தியாவில் ஹோண்டா ஜாஸ் கார் 89 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 99 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால், புதிய ஹோண்டா ஜாஸ் காரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் வழங்கப்படும். இதன்மூலமாக, அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான மாசு உமிழ்வு தன்மை கொண்டதாக இருக்கும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான எஞ்சின் ஆப்ஷன்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

இந்த ஆண்டு அக்டோபரில் டோக்கியோ மோட்டார் ஷோவின் மூலமாக பொது பார்வைக்கு வரும் புதிய ஹோண்டா ஜாஸ் கார் அடுத்த ஆண்டு பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு செல்லும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடலை எதிர்பார்க்கலாம்.

இது ஒருபுறம் இருக்க, ஹோண்டா ஜாஸ் காரின் அடிப்படையிலான பேட்டரி கார் மாடலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மாடலும் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








