ஹூண்டாய் கோனாவுக்கு போட்டியாக களமிறங்கும் நிஸான் லீஃப்: ஒருமுறை சார்ஜ் செய்தால் 400கிமீ பயணிக்கலாம்!
ஹூண்டாயின் கோனா எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக நிஸான் லீஃப் பேட்டரி கார் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு கார்களும் இந்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானை மையமாகக்கொண்டு இயங்கும் நிஸான் நிறுவனம் தனது புத்தம் புதிய கிக்ஸ் பிரீமியம் எஸ்யூவி மாடல் காரை சமீபத்தில் அறிமுகம் செய்தது. அப்போது, 2022ம் ஆண்டிற்கான வாகனங்களின் வெளியீடு குறித்த திட்டங்களை அந்த நிறுவனம் அறிவித்தது. அதில், வரும் காலங்களில் தயாரிக்கப்பட இருக்கும் வாகனங்களை டிஜிட்டல் மயமாகவும், புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டும் உருவாக்கி வருவதாக அது தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து, நிஸான் நிறுவனம் உலகின் முதல் ஜீரோ எமிஸ்ஸன் காரான லீஃப் எலக்ட்ரிக் காரைச் சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த கார் கடந்த மாதம் வரை உலகளவில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, லீஃப் காரை ஆசிய கண்டத்தில் அறிமுகம் செய்யும் விதமாக கடந்த 2018ம் ஆண்டு தாய்லாந்தில், நிஸான் நிறுவனம் அறிமுகம் செய்தது.

இந்நிலையில், தற்போது தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் நடைபெற்று வரும் 2019ம் ஆண்டிற்கான சர்வதேச வாகன கண்காட்சியில், லீஃப் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது நிஸான். இதனை, ஒரு லட்சம் கிலோமீட்டர் என்ற அளவீட்டுடன், 3 வருடங்கள் வாரண்டியுடன் நிஸான் விற்பனை செய்ய உள்ளது. மேலும், இந்திய மதிப்பில் ரூ. 43.26 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிஸானின் லீஃப் எலக்ட்ரிக் காரானாது, 4,480 மிமீ நீளமும், 1,790மிமீ அகலத்தையும் கொண்டுள்ளது. மேலும், இது 2,700 மிமீ உயரத்தைக் கொண்டுள்ளது. ஈகோ ஃபிரெண்ட்லியான இந்த காரில் இஎம்57 ரக மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 150பிஎஸ் பவரையும் 320என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், 40kWh லித்தியன்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சாதாரண சார்ஜிங் போர்ட்டில் சார்ஜ் செய்யும்போது 16 மணி நேரத்திலும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும்போது 40 நிமிடங்களில் 80 சதவீதமும் சார்ஜாகிவிடும். மேலும், இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை செல்லலாம்.

இந்த நிலையில், இந்த மின்சார காரை நிஸான் நிறுவனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய இருப்பதாக உறுதியான தகவல் வெளியாகியது. அந்த வகையில், இந்த கார் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டு இந்திய விதிகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, லீஃப் கார் இந்த ஆண்டின் மத்தியற்குள் இந்திய சாலைகளை கலக்க வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு இந்த கார் விற்பனைக்கு வருமானால், ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருப்பதாலே இந்த விலையுயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. இதேபோன்று, ஹூண்டாயின் கோனா என்ற எலக்ட்ரிக் மாடலும் இந்த ஆண்டின் மத்தியிற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த இரு கார்களும் இந்திய சந்தையில் கடுமையான போட்டியைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








