பெங்களூர் டூ இங்கிலாந்து... லண்டன் நகரில் கால் பதிக்கும் ஓலா...
இந்தியாவை சேர்ந்த ஓலா நிறுவனம் லண்டன் நகரில் கால் பதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மொபைல் ஆப் சார்ந்து செயல்படும் கேப் நிறுவனங்கள் இந்தியாவில் விஸ்வரூபமெடுத்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை மையமாக கொண்டு செயல்படும் ஓலா மற்றும் உபேர் ஆகிய நிறுவனங்களுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது. சர்வதேச அளவில் உபேர் நிறுவனத்தின் கையே ஓங்கியுள்ளது.

ஆனால் சர்வதேச அளவில் உபேர் நிறுவனத்திற்கு கடும் போட்டியை வழங்க ஓலா நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஓலா நிறுவனத்தின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில், இங்கிலாந்தை எடுத்து கொண்டால் தற்போது அந்நாட்டின் 5 நகரங்களில் ஓலா சேவை வழங்கப்படுகிறது.

இங்கிலாந்தின் கார்டிப், பாத், பிரிஸ்டல், எக்ஸீடர் மற்றும் லிவர்பூல் ஆகிய 5 நகரங்களில் ஓலா தனது சேவையை வழங்கி வருகிறது. இதில், கார்டிப் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதமும், அதனை தொடர்ந்து பாத், பிரிஸ்டல் மற்றும் எக்ஸீடர் ஆகிய நகரங்களிலும் கால் பதித்தது ஓலா. 5வது நகரமான லிவர்பூலில் கடந்த மாதம்தான் ஓலா சேவை தொடங்கப்பட்டது.

இங்கிலாந்தின் ரீடிங் மற்றும் பர்மிங்ஹாம் ஆகிய நகரங்களில் ஓலா சேவை நடப்பு மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் அந்நாட்டின் மான்செஸ்டர் நகரில் ஓலா நிறுவனம் அடுத்த மாதம் கால் பதிவுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தில் ஓலா சேவை கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கை அடுத்த மாதம் 8ஆக உயர்ந்து விடும்.

இந்த சூழலில் நடப்பாண்டு இறுதிக்கு முன்னதாக இங்கிலாந்து தலைநகர் லண்டனினும் தனது சேவையை விரிவாக்கம் செய்யவுள்ளதாக ஓலா நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கும் உபேர் நிறுவனத்திற்கு கடும் போட்டியை வழங்க ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் லண்டனில் சேவையை தொடங்குவதற்கான தேதி எதையும் ஓலா நிறுவனம் இன்னும் நிர்ணயிக்கவில்லை. எனினும் வரும் நவம்பர் மாதம் லண்டன் நகரில் ஓலா அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








