புதிய போர்ஷே கயென் கூபே சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்
போர்ஷே கயென் எஸ்யூவியின் கூபே ரக மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. மிகவும் தனித்துவமான தேர்வாக வந்திருக்கும் இந்த கார் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

போர்ஷே கயென் எஸ்யூவியின் மூன்றாம் தலைமுறை மாடலின் அடிப்படையிலான கூபே ரக மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் கூபே மற்றும் டர்போ கூபே என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும். போர்ஷே கயென் கூபே மாடலுக்கு ரூ.1.31 கோடி விலையும், கூபே டர்போ மாடலுக்கு ரூ.1.97 கோடி விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போர்ஷே கயென் எஸ்யூவியின் கூபே மாடலின் கூரை அமைப்பு பின்புறம் மிகவும் தாழ்ந்து மிக தனித்துவமான டிசைன் அமைப்பை பெற்றிருக்கிறது. மேலும், இந்த கார் முற்றிலும் புதிய கட்டமைப்புக் கொள்கையுடன் அதிக சிரத்தை எடுத்து உருவாக்கப்பட்டு இருப்பதாக போர்ஷே தெரிவித்துள்ளது.

பின்புற கதவுகளின் அகலம் 18 மிமீ அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன், நம்பர் பிளேட் பம்பர் அமைப்புடன் இணைந்து நிற்கிறது. இதனால், கார் தரைக்கு மிகவும் நெருக்கமாக நிற்பது போன்ற தோற்றத்தை பெற்றுள்ளது.

புதிய போர்ஷே கயென் கூபே எஸ்யூவியில் பனோரமிக் என்ற மிக விசாலமான கண்ணாடி கூரை அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 22 அங்குல ஜிடி அலாய் வீல்களும் மதிப்பை கூட்டுகிறது உட்புறம் மிக பிரிமீயமாகவும், ஃபேப்ரிக் மற்றும் கார்பன்- அல்கான்ட்ரா அக்சென்ட்டுகளுடன் அசத்துகிறது.

இந்த காரில் நிலையான ரூஃப் ஸ்பாய்லர் இடம்பெற்றிருப்பதுடன், காருக்கு கூடுதல் நிலைத்தன்மையை வழங்கும் அடாப்டிவ் ரியர் ஸ்பாய்லரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. போர்ஷே ஆக்டிவ் ஏரோடைனமிக்ஸ் தொழில்நுட்ப பேக்கேஜில் இந்த அடாப்டிவ் ரியர் ஸ்பாய்லர் வழங்கப்படுகிறது.

மேலும், 8 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் கூடிய எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஸ்போர்ட் இருக்கைகள், இருக்கையுடன் சேர்ந்த ஹெட்ரெஸ்ட் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஆர்ம் ரெஸ்ட் வசதியுடன் கூடிய ஸ்டோரேஜ் வசதியும், 7 அங்குல முழுமையான எச்டி திரையும் உள்ளன. தவிரவும், 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

போர்ஷே கயென் கூபே மாடலில் 3.0 லிட்டர் வி6 டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 340 எச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு டிரிப்ட்ரோனிக் எஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6 வினாடிகளில் எட்டிவிடும் திறனஅ வாய்ந்தது. மணிக்கு 243 கிமீ வேகம் வரை செல்லும்.

கூபே டர்போ மாடலில் 4.0 லிட்டர் வி-8 எஞ்சின் அதிகபட்சமாக 550 எச்பி பவரையும், 770 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 286 கிமீ வேகத்தை எட்டிவிடும். சொகுசு கார் மார்க்கெட்டில் மிகவும் தனித்துவமான, சக்திவாய்ந்த தேர்வாக இந்த புதிய போர்ஷே கயென் கூபே மாடல் அமையும்.


Click it and Unblock the Notifications








