போர்ஷே டைகன் எலெக்ட்ரிக் கார் இந்திய வருகை விபரம்!
போர்ஷே டைகன் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் மின்சார கார்களின் வருகை எகிடுதகிடாக இருக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக, அடுத்த ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவின் வாயிலாக பல புதிய மின்சார கார்கள் இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.

குறைவான விலை கொண்ட மின்சார கார் மார்க்கெட்டை குறிவைத்து பல புதிய மாடல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், போர்ஷே நிறுவனம் அதிரடியாக தனது ஸ்போர்ட்ஸ் ரக மின்சார காரை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

டைகன் என்ற பெயரிலான அந்த மின்சார கார் விரைவில் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த புதிய காரை 2020ம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்வதற்கு போர்ஷே கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய போர்ஷே டைகன் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரில் மிக திறன் வாய்ந்த பேட்டரி பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும். தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்ற கார். அதாவது, வாரம் முழுவதும் ஒரே சார்ஜில் அலுவலக வேலைகளை முடித்துவிடலாம்.

இந்த காரில் 800 வோல்ட் திறன் கொண்ட பேட்டரி மற்றும் சக்திவாய்ந்த மின் மோட்டார் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதன் பேட்டரியை வெறும் 4 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, 100 கிமீ தூரம் வரை பயமிகக்க முடியும் என்பது சிறப்பு.

இதனிடையே, அடுத்த 8 முதல் 10 மாதங்களில் 4 புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த போர்ஷே நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, மார்க்கெட்டை வலுப்படுத்திக் கொள்ளும் திட்டத்துடன் இருக்கிறது.

போர்ஷே நிறுவனம் ஏற்கனவே டீசல் எஞ்சின் கார்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டது. மேலும், ஹைப்ரிட் மற்றும் மின்சார கார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், இந்திய மார்க்கெட்டை மிக முக்கியமாக கருதி, டைகன் மின்சார காரை அறிமுகப்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.
Source:ET Auto


Click it and Unblock the Notifications








