மாருதி எர்டிகாவிற்கு கடும் சவால்... ரெனால்ட் ஆர்பிசி காரின் அதிகாரப்பூர்வ பெயர் இன்று வெளியாகிறது...
மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு போட்டியாக வரும் ரெனால்ட் ஆர்பிசி காரின் அதிகாரப்பூர்வ ப்ரொடக்ஸன் நேம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தடுமாறி வருகிறது. இந்திய மார்க்கெட்டில் ரெனால்ட் நிறுவனத்தை தாங்கி பிடித்து கொண்டிருந்த ஒரே கார் க்விட் (Renault Kwid) மட்டும்தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை க்விட் காரின் விற்பனை நன்றாகதான் சென்று கொண்டிருந்தது. ஆனால் தற்போது போட்டி அதிகரித்து விட்டதால், மார்க்கெட்டில் க்விட் விற்பனை 'டல்' அடிக்க ஆரம்பித்து விட்டது.

எனவே இந்திய மார்க்கெட்டில் தன்னை நிலை நிறுத்தி கொள்ள ரெனால்ட் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மிகவும் மலிவான விலையில் புதிய கார் ஒன்றை ரெனால்ட் களமிறக்கவுள்ளது. தற்போது இந்த கார் ஆர்பிசி (RBC) என்ற குறியீட்டு பெயரில் (Code Name) அழைக்கப்பட்டு வருகிறது. இது 7 சீட்டர் எம்பிவி ரக (MPV) கார் ஆகும்.

ரெனால்ட் ஆர்பிசி கார், கடந்த சில மாதங்களாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. க்விட் காரின் அப்டேட் செய்யப்பட்ட சிஎம்எஃப்-ஏ பிளாட்பார்ம் அடிப்படையில் ரெனால்ட் ஆர்பிசி கார் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெனால்ட் நிறுவனத்தின் உள்நாட்டு லைன் அப்பில், லாட்ஜி (Lodgy) காருக்கு கீழாக ரெனால்ட் ஆர்பிசி நிலை நிறுத்தப்படவுள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா காரின் (Maruti Suzuki Ertiga) சில வேரியண்ட்களுக்கு எதிராக ரெனால்ட் ஆர்பிசி போட்டியிடவுள்ளது.

ரெனால்ட் ஆர்பிசி காரில், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். ஹை எண்ட் வேரியண்ட்களில் ஏஎம்டி ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஆர்பிசி எம்பிவி காரில், ரெனால்ட் நிறுவனம் டீசல் இன்ஜினை வழங்குவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது.

ரெனால்ட் ஆர்பிசி காரில் வழங்கப்படவுள்ள பெட்ரோல் இன்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். ரூ.5 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் ரெனால்ட் ஆர்பிசி கார் எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் சவாலான விலை என்பதால், மாருதி சுஸுகி எர்டிகாவின் விற்பனை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரெனால்ட் ஆர்பிசி கார், வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ட்யூயல் ஏர் பேக், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹை-ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட வசதிகள் ஸ்டாண்டர்டாக இடம்பெறவுள்ளன. அதே சமயம் இதன் இன்டீரியரில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் ஆர்பிசி காரின் அதிகாரப்பூர்வ ப்ரொடக்ஸன் நேம் (Production Name) இன்று (ஏப்ரல் 4) அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக இந்த கார், ட்ரைபர் (Triber), ஹீலியோஸ் (Helios), கைஜர் (Kiger) அல்லது கிவாக் (Kiwak) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பெயரை தாங்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர்பான உறுதியான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
NOTE: Images Used Are For Representational Purpose Only


Click it and Unblock the Notifications








