விரைவில் டொயோட்டா பிராண்டில் அறிமுகமாகும் மாருதி சியாஸ்!
மாருதி சியாஸ் கார் ரீபேட்ஜ் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு டொயோட்டா பிராண்டில் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி சுஸுகி நிறுவனமும், டொயோட்டா கார் நிறுவனமும் இந்தியாவில் கூட்டணி முறையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. அதன்படி, மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு க்ளான்ஸா என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதுடன், டொயோட்டா விற்பனையிலும் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பை வழங்கத் துவங்கி இருக்கிறது.

அடுத்ததாக மாருதி சியாஸ் காரை டொயோட்டா நிறுவனம் விரைவில் தனது பிராண்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா பிராண்டில் வர இருக்கும் சியாஸ் காரில் வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும். புதிய அலாய் வீல்கள் மற்றும் டொயோட்டா பேட்ஜ் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க மாற்றத்தை வழங்கும்.

டொயோட்டா பிராண்டில் வர இருக்கும் சியாஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

இந்த காரில் இடம்பெற இருக்கும் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். இதே ரகத்தில் யாரிஸ் என்ற மிட்சைஸ் செடான் கார் மாடலை டொயோட்டா விற்பனையில் வைத்துள்ளது.

ஆனால், யாரிஸ் கார் எதிர்பார்த்த அளவு விற்பனையில் சோபிக்கவில்லை. எனவே, சியாஸ் காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் மூலமாக குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை பெற முடியும் என்று டொயோட்டா நம்புகிறது. அடுத்ததாக எர்டிகா காரை ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தையும் டொயோட்டா வைத்துள்ளது.

மறுபுறத்தில் டொயோட்டா நிறுவனத்தின் கரொல்லா ஆல்டிஸ் காரை ரீபேட்ஜ் செய்து களமிறக்க மாருதி சுஸுகி திட்டம் வைத்துள்ளது. ஆனால், அதற்கான எந்த தகவல்களும் இதுவரை வரவில்லை.


Click it and Unblock the Notifications








