ரெனோ கேப்ச்சர் காருக்கு ரூ.81,000 டிஸ்கவுண்ட்!!
ரெனோ கேப்ச்சர் காருக்கு ரூ.81,000 வரை தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ரெனோ கேப்ச்சர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடலாக வந்த ரெனோ கேப்ச்சர் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இருப்பினும், ரெனோ கேப்ச்சர் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மிக்க மாடலாக வசதிகளிலும், தொழில்நுட்ப அம்சங்களிலும் விளங்குகிறது.

இந்தநிலையில், நிஸான் நிறுவனம் கிக்ஸ் எஸ்யூவியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இதனால், ரெனோ கேப்ச்சர் மார்க்கெட்டில் மேலும் அடி விழும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

இதையடுத்து, ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியிக்கு ரூ.81,000 வரை தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆர்எக்ஸ்டி டியூவல் டோன் பெட்ரோல் வேரியண்ட்டிற்கு ரூ.41,000 வரையிலும், டீசல் வேரியண்ட்டிற்கு ரூ.60,000 வரையிலும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

பிளாட்டீன் டீசல் வேரியண்ட்டிற்கு ரூ.81,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பேஸ் மாடல்களுக்கு தள்ளுபடி இல்லை. கடந்த 2018ம் ஆண்டு தயாரிப்பு தேதியுடன் இருப்பில் இருக்கும் ரெனோ கேப்ச்சர்களுக்கு இந்த தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.

மேலும், கார்ப்பரேட் சலுகையாக ரூ.5,000 வழங்கப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சலுகைகள் மூலமாக ரெனோ கேப்ச்சர் கூடுதல் மதிப்பு மிக க்ராஸ்ஓவர் மாடலாக மாறி இருக்கிறது.

ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 119 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. இதே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியிலும் இடம்பெற்றுள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் ரெனோ கேப்ச்சர் இந்தியாவிற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களுடன் வந்தது. இந்த எஸ்யூவி 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கிறது.

எல்இடி ஹெட்லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த காரில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு நுட்பங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








