கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம்!
கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.
கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி சிறந்த தேர்வுகளில் ஒன்றாக வலம் வருகிறது. இந்த சூழலில், புதிய மாடல்களின் வருகையால் மார்க்கெட் வலு குறைந்துவிடும் வாய்ப்பு இருப்பதால், கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

தற்போது ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் விதத்தில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டஸ்ட்டர் எஸ்யூவியின் RxE, RxS மற்றும் RxZ ஆகிய வேரியண்ட்டுகளில் இந்த 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கிடைக்கும். எனினும், ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி நீக்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனிலேயே இந்த வசதி இருப்பதால் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

அதேபோன்று, அனைத்து வேரியண்ட்டுகளிலும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது. இது நிச்சயம் மதிப்பு கூட்டும் விஷயமாக இருப்பதுடன் புதிய பாதுகாப்பு நடைமுறைக்கு ஒப்பானதாக இருக்கும்.

ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த RxL பெட்ரோல் சிவிடி கியர்பாக்ஸ் வேரியண்ட்டிற்கு பதிலாக புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் RxS என்ற புதிய மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, 84 பிஎச்பி பவரை அளிக்க வல்ல டீசல் எஞ்சின் மாடலில் இருந்து பேஸ் வேரியண்ட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியானது 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டுவிதமான பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் 84 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மாடலிலும், 108 பிஎச்பி பவரையும், 248 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மற்றொரு மாடலிலும் கிடைக்கும். 84 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் மாடலில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆப்ஷனும், 108 பிஎச்பி பவரை அளிக்கும் மாடலானது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி ரூ.7.99 லட்சத்தில் இருந்து ரூ.13.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி எஸ் க்ராஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடுகிறது.


Click it and Unblock the Notifications








