ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு!
ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வர இருக்கும் நிலையில், அதற்கு இணையான தர நிர்ணயம் கொண்ட எஞ்சின்களுடன் கார் மாடல்களை அனைத்து நிறுவனங்களும் அறிமுகம் செய்து வருகின்றன.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ நிறுவனமும் தனது கார் மாடல்களில் பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகளை வழங்குவதற்கான முனைப்பில் இருக்கிறது. ஏற்கனவே, தனது பிரபலமான 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் உற்பத்தியை நிறுத்த ரெனோ முடிவு செய்துவிட்டது.

இந்த நிலையில், தற்போது விற்பனையில் இருக்கும் கார்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளை வழங்க ரெனோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் ரெனோ கார் நிறுவனம் யூரோ-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.0 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்களை பயன்படுத்ததுகிறது. இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மற்றொரு 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 130 பிஎஸ் மற்றும் 150 பிஎஸ் என இரண்டு விதமான பவரை வெளிப்படுத்தும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை பயன்படுத்திக் கொள்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

டஸ்ட்டர், கேப்ச்சர் உள்ளிட்ட கார்களில் இந்த புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. லாட்ஜி காரிலும் இந்த எஞ்சின் பயன்படுத்தப்படும் என்ற அந்த தகவல் கூறினாலும், அந்த கார் இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட இருப்பதாகவும் ரெனோ வட்டாரத் தகவல் கூறுகிறது.

மேலும், டஸ்ட்டர் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, முற்றிலும் புதிய மாடலாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் புதிய டஸ்ட்டர் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








