அட்டகாசமான ஸ்டைலில் புதிய ரெனோ எஸ்யூவி... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு!
அர்கனா என்ற புத்தம் புதிய கூபே ரக எஸ்யூவி மாடலை ரஷ்ய மார்க்கெட்டில் ரெனோ கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

போர்ஷே கேயென் உள்ளிட்ட கூபே ரக எஸ்யூவி மாடல் ஐரோப்பிய நாடுகளில் வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. அதேநேரத்தில், முழுமையான கூபே ரக எஸ்யூவியாக இல்லாமல், சில க்ராஸ்ஓவர் மாடல்கள் இந்தியாவில் உள்ளன. ஆனால், அவை இந்தியர்களை அவ்வளவாக கவரவில்லை என்பது விற்பனை வரலாறு கூறும் உண்மை.
இந்த நிலையில், ரஷ்யாவில் புதிய கூபே ரக எஸ்யூவி மாடல் ஒன்றை ரெனோ கார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரெனோ அர்கனா என்று குறிப்பிடப்படும் இந்த புதிய மாடலின் டிசைன் போர்ஷே கேயென் உள்ளிட்ட கூபே ரக எஸ்யூவியின் தழுவலாக இருக்கிறது.
சி ரகத்திலான எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும் சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் புதிய ரெனோ அர்கனா 4.5 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூபே ரக எஸ்யூவியில் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. எக்ஸ்-ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
ரெனோ அர்கனாவில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இந்த 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை ரெனோ - நிஸான் - மிட்சுபிஷி கூட்டணி இணைந்து உருவாக்கி இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடலான ரெனோ கேப்ச்சர் காரின் டிசைன் தாத்பரியங்களும் இந்த காரில் அதிகம் காண முடிகிறது.
இந்த காரில் சி வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய க்ரில் அமைப்பு, பனரோமிக் கண்ணாடி கூரை ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இதன் கூரை பின்புறமாக சரிந்து டிசைன் செய்யப்பட்டு இருப்பதே இதற்கு கூபே வடிவிலான தோற்றத்தை அளிக்கிறது.
இந்த காரில் 17 அங்குல அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காரை சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்களும் பொருத்தப்பட்டு இருப்பது இதற்கு எஸ்யூவிகளுக்கு உண்டான மிடுக்கை தருகிறது.

இந்த காரின் உட்புறம் மிகச் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கிறது. இந்த காரில் 8 அங்குல தொடுதிரையுடன் மல்டி மீடியா வசதிகளை அளிக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மல்டி சென்ஸ் தொழில்நுட்பத்தின் மூலமாக ஈக்கோ, ஸ்போர்ட் மற்றும் மை சென்ஸ் ஆகிய மூன்று டிரைவிங் மோடுகள் வசதிகள் உள்ளன.
இந்த கூபே எஸ்யூவியில் 508 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. பின்இருக்கைகளை மடக்கினால் அதிகபட்சமாக 1,333 லிட்டர் வரை கொள்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.
இந்த புதிய கூபே எஸ்யூவி மாடல் விரைவில் ரஷ்யாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த புதிய மாடல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கலாம். தனித்துவமான கார்களை விரும்பும் கார் ரசனையாளர்களை இது கவரும் என்று நம்பலாம்.
இதே ஸ்டைலில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் கூபே மாடல் கடந்த 2016ம் ஆண்டு டெல்லி சர்வதேச கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இது மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் என்ற பெயரில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








