பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...
ரெனால்ட் நிறுவனம் தனது பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில், 4 புதிய கார்களை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், ட்ரைபர் 7 சீட்டர் எம்பிவி, க்விட் மற்றும் டஸ்டர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்கள் என மொத்தம் மூன்று மாடல்கள் நடப்பாண்டில் களமிறக்கப்படவுள்ளன.

இதுதவிர சிஎம்எஃப்-ஏ பிளாட்பார்ம் அடிப்படையில், புத்தம் புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் ஒன்றை லான்ச் செய்யும் பணிகளிலும் ரெனால்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி காரானது, டாடா நெக்ஸான் மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய மாடல்களுடன் போட்டியிடும். இனி க்விட் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் குறித்து பார்க்கலாம்.

ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் கார் நடப்பாண்டின் இரண்டாவது பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வரும் செப்டம்பர் மாதம். முன்னதாக சமீபத்தில் நடைபெற்ற 2019 ஷாங்காய் ஆட்டோ ஷோவில், க்விட் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சிட்டி கே-இஸட்இ எலெக்ட்ரிக் கார் வெளியிடப்பட்டது. புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலானது இந்த காருடன் ஸ்டைலை பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்டி கே-இஸட்இ போன்று புதிய முன்பக்க பம்பர் மற்றும் ஹெட்லைட்கள் ஆகியவற்றை அப்டேட் செய்யப்பட்ட க்விட் ஃபேஸ்லிஃப்ட் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர பகல் நேரத்திலும் எரியும் புதிய எல்இடி விளக்குகளும் வழங்கப்படவுள்ளன. க்ரில் டிசைனும் மாற்றியமைக்கப்படவுள்ளது. அதே சமயம் பக்கவாட்டு தோற்றம் மாற்றியமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஒருவேளை புதிய சக்கரங்கள் மட்டும் வழங்கப்படலாம். தற்போதைய க்விட் காரில் அலாய் வீல்கள் இல்லை. ஆனால் க்விட் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அலாய் வீல்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர விரைவில் அமலாகவுள்ள க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் ரெனால்ட் நிறுவனம் பிளாட்பார்மில் சில மாற்றங்களை செய்யும் என தெரிகிறது. பாதுகாப்பு வசதிகள் என எடுத்து கொண்டால், இபிடி உடனான ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீட் அலர்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்படவுள்ளன.

அதே நேரத்தில் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பொறுத்தவரை, இந்த எஸ்யூவியின் கேபினில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது தலைமுறை டஸ்டர் காரை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யாது என சமீபத்தில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

அதற்கு மாறாக நேரடியாக மூன்றாவது தலைமுறை டஸ்டர்தான் இந்தியாவில் லான்ச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு 2022-23ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். அதுவரை தற்போது உள்ள டஸ்டர் காரைதான் ரெனால்ட் நிறுவனம் வழக்கமான அப்டேட்களுடன் நமது மார்க்கெட்டில் விற்பனை செய்யவுள்ளது.

இதனிடையே ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் நடப்பாண்டின் இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவி காரானது புத்தம் புதிய கேபினை பெறவுள்ளது. அனேகமாக கேபினின் முக்கியமான வசதிகள் புதிய நிஸான் கிக்ஸ் காருடன் பகிர்ந்து கொள்ளப்படலாம். புதிய இருக்கைகள் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சப்போர்ட் உடன் கூடிய புதிய டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெறலாம் எனவும் கூறப்படுகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் இந்த எஸ்யூவி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








