பல்வேறு அம்சங்களுடன் பிரிமீயம் மாடலாக வரும் புதிய ரெனோ க்விட் கார்!
அதிக பிரிமீயம் வசதிகளுடன் புதிய ரெனோ க்விட் கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்தியாவில் ரெனோ கார் நிறுவனத்தின் பிளாக்பஸ்டர் மாடலாக க்விட் கார் பெயர் பெற்றது. அசத்தலான வடிவமைப்பு, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மிக குறைவான விலையில் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புத்தம் புதிய ரெனோ க்விட் கார் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த காரில் அதிக பிரிமீயம் வசதிகள் இடம்பெற இருப்பது ஸ்பை படங்கள் மூலமாக உறுதியாகி இருக்கிறது.

புதிய ரெனோ க்விட் காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட இருக்கிறது. அண்மையில் அறிமுகமான ட்ரைபர் காரில் கொடுக்கப்பட்ட அதே சாதனம்தான் இந்த புதிய க்விட் காரிலும் இடம்பெறுகிறது. இது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

சீனாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கும் ரெனோ க்விட் காரின் அடிப்படையிலான K-ZE எலெக்ட்ரிக் காரின் டிசைன் தாத்பரியங்கள் இந்த புதிய மாடலிலும் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பை படங்களின் மூலமாக, டிசைன் அம்சஙகளும் ஓரளவு அனுமானிக்கப்பட்டுவிட்டது.

முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்டூரமென்ட் க்ளஸ்ட்டர், பியானோ பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் டேஷ்போர்டு அமைப்பு, ஆரஞ்ச் வண்ணத்திலான அலங்கார அம்சங்களுடன் பிரிமீயம் பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மாடலாக வர இருக்கிறது புதிய ரெனோ க்விட் கார்.

புதிய வடிவமைப்பிலான ஹெட்லைட் க்ளஸ்ட்டர், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இந்த காருக்கு வலு சேர்க்கும். மொத்தத்தில் வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்பட்ட மாடலாக வருகிறது.

புதிய ரெனோ க்விட் காரில் 800 சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்கள் தக்க வைக்கப்படும். இதன் 800 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 54 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 68 பிஎச்பி பவரையயும், 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். ஆனால், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் தேர்வுகள் அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

வரும் அக்டோபர் 1 முதல் வர இருக்கும் புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வர இருக்கிறது. டட்சன் ரெடிகோ, மாருதி எஸ் பிரெஸ்ஸா உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும்.
Spy Images Source: Gaadiwaadi


Click it and Unblock the Notifications








