ரெனோ லாட்ஜி கார் விரைவில் இந்திய சந்தையிலிருந்து விடைபெறுகிறது!
ரெனோ லாட்ஜி கார் விற்பனையிலிருந்து விரைவில் விலக்கிக் கொள்ளப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் அதிக எதிர்பார்ப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் ரெனோ லாட்ஜி எம்பிவி கார். ஆனால், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மாருதி எர்டிகா கார்களின் வலுவான சந்தையை ரெனோ லாட்ஜி காரால் உடைக்க முடியவில்லை. இதன் வடிவமைப்பு மற்றும் ரெனோ நிறுவனத்தின் விற்பனைக்கு சேவை உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை கவரவில்லை.

எனினும், மாருதி எர்டிகா காரைவிட மேம்பட்ட இடவசதி மற்றும் இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட விலை குறைவான மாற்றுத் தேர்வாக இருந்து வந்தது. ஆனால், ரெனோ கார் நிறுவனம் எதிர்பார்த்த அளவு விற்பனையில் சோபிக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று நடந்த புதிய ரெனோ ட்ரைபர் கார் அறிமுக விழாவின்போது ரெனோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மமில்லபல்லே கார்டாக் தளத்திற்கு முக்கியத் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், புதிய மாசு உமிழ்வு விதிகளால், 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சினை விலக்கிக் கொள்ளப்பட இருப்பதாக கூறி இருக்கிறார். இதனால், டஸ்ட்டர், கேப்ச்சர் ஆகிய கார்களில் பிரபலமான 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு நீக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரெனோ கேப்ச்சர் காரில் பெட்ரோல் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் நீக்கப்பட இருப்பதும் தெரிய வந்துள்ளது. அத்துடன், விற்பனையில் இருந்து ரெனோ லாட்ஜி எம்பிவி காரும் விலக்கிக் கொள்ளப்பட இருப்பதையும் உறுதி செய்துள்ளார்.

ரெனோ லாட்ஜி எம்பிவி கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. இதன் அதிக சிறப்பம்சங்கள் வாய்ந்த மாடல் ஸ்டெப்வே என்ற பெயரிலும் கிடைக்கிறது. இந்த கார் ரூ.8.63 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

ரெனோ லாட்ஜி எம்பிவி உள்ளிட்ட கார்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் இந்தியர்கள் மத்தியில் பிரபலமானதாகவும், நம்பகத்தன்மையையும் பெற்றிருக்கிறது. இந்த டீசல் எஞ்சின் 85 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஒரு மாடலிலும், 108 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும் மற்றொரு மாடலிலும் இந்தியாவில் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், ரெனோ லாட்ஜி இடத்தை புதிய ட்ரைபர் எம்பிவி காரை வைத்து நிரப்புவதற்கு ரெனோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், குறைவான பட்ஜெட்டில் அதிக சிறப்பம்சங்களுடன் இந்த கார் பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








