மிகவும் மலிவான விலையில் இந்தியாவில் களமிறங்கும் ரெனால்ட் கார் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி...
மிகவும் மலிவான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள ரெனால்ட் ட்ரைபர் கார், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் மற்றும் டஸ்டர் உள்ளிட்ட கார்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான மாடல்களாக உள்ளன.

இந்த சூழலில், ரெனால்ட் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள ட்ரைபர் (Renault Triber) கார் இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ளது. சப்-4 மீட்டர் எம்பிவி ரக காரான ரெனால்ட் ட்ரைபர், 7 சீட்டர் மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரை கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. வரும் பண்டிகை காலத்தையொட்டி ட்ரைபர் காரை ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டட்சன் கோ ப்ளஸ் மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் போட்டியிடவுள்ளது. ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு விட்டாலும் கூட, விலையை இன்னும் அறிவிக்கவில்லை.

அனேகமாக ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வெறும் 5 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9 லட்ச ரூபாயாக இருக்கலாம். இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ரெனால்ட் ட்ரைபர் காரில், 1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டீசல் கார்களை உற்பத்தி செய்யப்போவது இல்லை என ரெனால்ட் அறிவித்துவிட்டது. எனவே ட்ரைபர் கார் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைக்கும்.

இந்த சூழலில் ட்ரைபர் எம்பிவி காரை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக ET Auto செய்தி வெளியிட்டுள்ளது. க்விட் காரை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு ட்ரைபர் காரும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

தற்போதைய நிலையில் இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு க்விட் காரை ரெனால்ட் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. இதே நாடுகளுக்கு ட்ரைபர் காரும் ஏற்றுமதி செய்யப்படலாம்.

இதுகுறித்து ரெனால்ட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இந்திய மார்க்கெட்டிற்கான தேவையை பூர்த்தி செய்த பிறகு, க்விட் காரை ஏற்றுமதி செய்யும் மார்க்கெட்களுக்கு ட்ரைபர் காரையும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு வருகிறோம்'' என்றார்.


Click it and Unblock the Notifications








