மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ போட்டியாளரை களமிறக்கும் ரெனோ!
காம்பேக்ட் எஸ்யூவி காரை விற்பனை செய்வதற்கு ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆட்டோமொபைல் துறை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில், எஸ்யூவி கார்களை கைவசம் வைத்திருக்கும் நிறுவனங்கள் சிறிது தப்பி பிழைத்து வருகின்றன. குறிப்பாக, காம்பேக்ட் எஸ்யூவி கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் ஓரளவு சிறப்பான வர்த்தகத்தை பெற்று வருகின்றன.

சராசரியாக மாதத்திற்கு 26,000 கார்களுக்கு மேல் விற்பனையாகி வரும் இந்த செக்மென்ட்டில் ஒரு மாடல் இருந்தால் அடுத்த சில ஆண்டுகளுக்கு வண்டியை ஓட்டலாம் என்கிற நிலைதான் நீடிக்கிறது. இந்த நிலையில், ரெனோ நிறுவனமும் இந்த ரகத்தில் ஒரு மாடல் வேண்டும் என்கிற அவசியத்தை உணர்ந்து கொண்டுள்ளது.

தனது சிஎம்எஃப்ஏ-ஏ + பிளாட்ஃபார்மில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்வதற்கு ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட ரெனோ ட்ரைபர் மற்றும் க்விட் கார்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த புதிய எஸ்யூவி 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டு இருக்கும். ரெனோ கார் நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்கள் மற்றும் அதிக தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்திய வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் விதத்தில் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இது முழுக்க முழுக்க புதிய கார் மாடலாக வர இருக்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய கார் மாடல்களுக்கு நேரடி போட்டியை தரும் பரிமாணத்திலும், வசதிகளும் வர இருக்கிறது.

ரெனோ நிறுவனத்தின் புதிய எஸ்யூவி மாடலானது HBC என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த எஸ்யூவியில் புதிய டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இது மிகவும் சக்திவாய்ந்த மாடலாகவும் நிலைநிறுத்துவதற்கு ரெனோ திட்டமிட்டுள்ளது.

இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக நம்பிக்கையை பெற்ற 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் ரெனோ நிறுவனத்திடம் உள்ளது. ஆனால், அந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்படாது என்று தெரிகிறது. எனவே, டீசல் மாடல் என்பது இப்போதைக்கு உறுதி இல்லை.

தொடுதிதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த புதிய கார் பெற்றிருக்கும்.

தற்போது டாடா நெக்ஸான் கார் ரூ.6.48 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இதனைவிட குறைவான விலையில் தனது புதிய எஸ்யூவி மாடலை நிலைநிறத்துவதற்கும் ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி மாடலை ரெனோ அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








