புதிய ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடல் அறிமுகம் எப்போது?
புதிய ரெனோ ட்ரைபர் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்ற விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த வாரம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் சிறந்த பட்ஜெட் 7 சீட்டர் கார் தேர்வாக மாறி இருக்கிறது. மேலும், இருக்கைகளை விருப்பம்போல் மாற்றிக் கொள்ளும் வகையிலான அம்சமும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரெனோ ட்ரைபர் காரின் டிசைன் மிக வசீகரமாக இருப்பதுடன், தொழில்நுட்ப வசதிகளும் கவரும் வகையில் இருக்கிறது. இந்த கார் 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்தது. ஆனால், டாப் வேரியண்ட்டே ரூ.6.49 லட்சம் என்ற சவாலான விலையில் வந்துள்ளது.

தற்போது ரெனோ ட்ரைபர் கார் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கிடைக்கிறது. இந்த எஞ்சின் 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. தற்போது இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆட்டோ எக்ஸ்போவை ஒட்டி அறிமுகம் செய்யப்படும் வாயப்புள்ளது. மேலும், ரெனோ ட்ரைபர் காரின் ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனோ ட்ரைபர் காரின் ஏஎம்டி மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளைவிட ரூ.30,000 வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். எனவே, ரெனோ ட்ரைபரின் டாப் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் மாடலே ரூ.7 லட்சத்திற்குள் நிலைநிறுத்தப்படும்.

இதனால், மிக குறைவான விலையில் கிடைக்கும் 7 சீட்டர் மாடலாக இந்த புதிய ரெனோ ட்ரைபர் கார் தேர்வுக்கு வர இருக்கிறது. இந்த காரை 2 சீட்டர், 3 சீட்டர், 4 சீட்டர், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என்று தேவைக்கு தக்கவாறு பயன்படுத்த முடியும் என்பதே ஆகச் சிறந்த அம்சம்.

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஜிபிஎஸ் நேவிகேஷன் புளூடூத், ஆக்ஸ் போர்ட், மியூசிக் ஸ்ட்ரீமிங் வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த சாதனம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

புதிய ரெனோ ட்ரைபர் காரின் டாப் வேரியண்ட்டில் 4 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு அலர்ட் வசதிகள் உள்ளன. ஏஎம்டி மாடலில் ஹில் ஹோல்டு அசிஸ்ட் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








