ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் அறிமுக விபரம் வெளியானது!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி காரின் அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ நிறுவனத்தின் ட்ரைபர் எம்பிவி கார் 4 மீட்டர் உருவாக்கப்பட்டுள்ள 7 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. கச்சிதமான தோற்றம், கவரும் டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் மிக குறைவான பட்ஜெட்டில் வருவதாக வெளியான தகவல்களால் இந்த கார் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது.

இந்த நிலையில், புதிய ரெனோ ட்ரைபர் கார் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், பண்டிகை காலத்திற்கு முன்னதாக எப்படியும் புதிய ரெனோ ட்ரைபர் விற்பனைக்கு வந்துவிடும்.

இந்த கார் ரெனோ - நிஸான் கூட்டணியின் சிஎம்எஃப்-ஏ ப்ளஸ் என்ற பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெரும் வரவேற்பை பெற்ற க்விட் காரின் டிசைன் அம்சங்களுடன் இந்த கார் வருகிறது. எல்இடி பகல்நேர விளக்குகள், ரூஃப் ரெயில்கள், பாடி கிளாடிங் சட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் தோற்றத்தை கவர்ச்சியாக காட்டுகிறது.

டட்சன் கோ ப்ளஸ் காருக்கு அடுத்ததாக 4 மீட்டருக்குள் வர இருக்கும் 7 சீட்டர் மாடல் என்பது இதன் மிகப்பெரிய பலம். மேலும், இதன் மூன்றாவது வரிசை இருக்கைகளை எளிதாக கழற்றி மாட்ட முடியும். மூன்றாவது வரிசை இருக்கைகளை நீக்கினால் 625 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற முடியும். அதாவது, 4 மீட்டர் நீளத்திலான கார்களில் அதிக பூட்ரூம் இடவசதி கொண்ட மாடலாகவும் இருக்கும்.

இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. டிஜிட்டல் இன்ஸஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் இதன் முக்கிய அம்சமாக இருக்கும்.

புதிய ரெனோ ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ரெனோ ட்ரைபர் கார் ரூ.4.5 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வசதிகளும் பொருந்திய டாப் வேரியண்ட் ரூ.6 லட்சத்திற்குள் இருக்கும் என்று வரும் தகவல்களால் இந்த கார் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications








